Tamilnadu
SBI ATM-களில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் மட்டும் குறிவைத்து கொள்ளை.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
சென்னை சின்மயா நகர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் நூதன முறையில் பணம் மட்டும் எடுக்கப்பட்டது வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அங்கு சென்று சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி கேஷ் டெபாசிட் மெஷின்களில் பணத்தை எடுப்பது பதிவாகியுள்ளது.
ஆனால், மெஷின்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தாலும் வங்கிகளில் அந்த கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக காட்டாததால், வங்கி அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் முரளி பாபு புகார் அளித்துள்ளார்.
அதேபோல ராமபுரம் வள்ளுவர் சாலை பகுதியில் உள்ள ஏ.டி.எம்மிலும் 2 லட்சம் கொள்ளை போனதாக வங்கி மேலாளர் முரளியும் ராயலா நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். மேலும் வேளச்சேரி விஜய நகர், தரமணி ஆகிய எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-களில் என கடந்த ஒரே வாரத்தில் சுமார் 15 லட்ச ரூபாய் வரை கொள்ளை போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த பகுதியின் வங்கி மேலாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து வங்கி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் நூதன முறையில் கொள்ளை நடந்தது எப்படி என ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-களில் கேஷ் டெபாசிட் மெஷின் இருக்கும் இடங்களில் மட்டும் கொள்ளை நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஓ.கே.ஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்து ஏ.டி.எம்-களில் வைக்கப்பட்டிருக்கும் கேஷ் டெபாசிட் மெஷின்களில் மட்டும் இந்த கொள்ளையை கொள்ளை கும்பல் அரங்கேற்றுகிறது. பொதுவாக கேஷ் டெபாசிட் மெஷினில் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பின் நம்பர் செலுத்தினால், பணமானது வெளியே வரும். அவ்வாறு ஏ.டி.எம் மிஷினில் இருந்து வெளிவந்த பணத்தை 20 நொடிகளுக்குள் எடுக்கவில்லை எனில் மீண்டும் பணம் மெஷினுக்கு உள்ளேயே திரும்பிவிடும்.
இந்த தொழில்நுட்பத்தை அறிந்த கொள்ளையர்கள் பணம் மெஷினில் இருந்து வெளிவந்தவுடன், 20 நொடிகளுக்குள் பணத்தை எடுக்காமல் இருந்துள்ளனர். அதன்பின் பணம் மீண்டும் மெஷினுக்குள் செல்வதற்குள்ளாக, பணம் வெளியே வரும் அந்த வாயில் பகுதியில் ஷட்டரையும், சென்சாரையும் விரல்களை வைத்து தடுத்து நிறுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு தடுத்து நிறுத்தப்படுவதால் பணம் உள்ளே செல்ல முடியாமல் நிற்கும். அப்போது அந்தப் பணத்தை கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். மீண்டும் கையை எடுத்தவுடன் பணம் உள்ளே வந்துவிட்டதாக மிஷின் சென்சார் நினைத்துக் கொண்டு, பணம் எடுக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மீண்டும் பணம் தானாகவே சென்றுவிடும்.
இந்த தொழில்நுட்பம் தெரிந்த கொள்ளையர்கள் பலமுறை கார்டை ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி டெபாசிட் மெஷின்களில் பல லட்ச ரூபாயை கொள்ளை அடித்துள்ளனர். ஒவ்வொரு மெஷினிலும் 10 ஆயிரம் என்ற வீதத்தில் 10 முதல் 15 தடவை பணத்தை எடுத்துக் கொள்ளையடித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த எஸ்.பி.ஐ வங்கி ஓ.கே.ஐ நிறுவனம் தயாரித்த கேஷ் டெபாசிட் மெஷின்கள் மூலம் பணத்தை எடுப்பதற்கான வசதியை தடை செய்துள்ளது. அது மட்டுமல்லாது, இந்த ஓ.கே.ஐ நிறுவனம் பல வங்கிகளுக்கு ஏ.டி.எம் மெஷின்கள் தயாரித்துக் கொடுத்துள்ளதால் அனைத்து வங்கி அதிகாரிகளும் தங்கள் வங்கி ஏ.டி.எம்களில் கொள்ளை நிகழ்ந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கொள்ளையர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்கு போலி முகவரியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்கு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலை பிடிக்கும் பணியில் இரண்டு தனிப்படை அமைத்து தற்போது போலிஸார் தீவிரமாக தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!