Tamilnadu
“பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி!
ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இந்நிலையில், இன்று அவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார்.
மேலும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் கவுண்டர், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவு குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, மானாமதுரை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி அவர்கள், மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்.
இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என, தி.மு.க பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த அவை முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆனால், இந்த அவையினுடைய முதல் கூட்டத்தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது என்று கருதுகிற காரணத்தினால்தான், வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அந்த உரிய தீர்மானத்தைக் கொண்டுவந்து, நிச்சயமாக மத்திய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழக அரசினுடைய எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவு செய்து, அவற்றைத் திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
அதைப் போலவே, இன்னொன்று, ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதையும் தெரிவிக்கின்றேன்". என உரையாற்றினார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!