Tamilnadu
சிவ சங்கர் பாபா கைது எதிரொலி.. சுஷில் ஹரி பள்ளியில் இருந்து TC வாங்கப் படையெடுக்கும் பெற்றோர்!
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலிஸார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து செங்கல்பட்டு மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து செங்கல்பட்டு சிறையில் சிவசங்கர் பாபா அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிவ சங்கர் பாபாவுக்கு இன்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவ சங்கர் பாபா மீது பாலியல் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் ஏராளமான மாணவர்களின் பெற்றோர்கள், டி.சியை வாங்கிக் கொண்டு வேறு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காகத் தொடர்ந்து 5வது நாளாக பள்ளிக்கு படையெடுத்து வந்தவண்ணமாய் இருக்கின்றனர்.
ஆனால், பள்ளி நிர்வாகம், சான்றிதழ் மற்றும் கட்டணம் திரும்ப வாங்குவதற்கு, முன்னதாக படிவம் ஒன்றை கொடுத்து அதை பூர்த்தி செய்து கொடுங்கள், ஒரு வாரத்திற்குள் டி.சி தருவதாகப் பெற்றோர்களிடம் தெரிவித்து வருகிறது. அதேபோல் சான்றிதழ்களை வாங்கும் பெற்றோர்கள் இந்தாண்டு பிள்ளைகளுக்காகக் கட்டிய கல்வி கட்டணத்தையும் திரும்ப கொடுக்கும்படியும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர்களின் சான்றிதழ்களைப் பெற வரும் பெற்றோர்களைப் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்காமல், பள்ளி நுழைவு வாயிலில் வெளியிலேயே நிற்கவைத்து அங்கியே பதில் கூறி அனுப்பிவிடுகின்றனர். இதனால், பெற்றோர்கள், மாணவர்கள் பழைய பள்ளியில் டிசி மற்றும் கட்டணத்தை வாங்கவும், மாற்று பள்ளியில் சேர்க்கவும் அலைமோதி வருகின்றனர்.
எனவே, மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி மேற்கண்ட பள்ளியில் எளிய முறையில் டிசி வாங்கவும், மாற்றுபள்ளியில் சேர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் வெங்கடேசன் என்பர் கூறுகையில், “இந்த பள்ளியில் எனது மகன், மகள் படிக்கின்றனர். கடந்த மே மாதமே 71 ஆயிரம் கல்வி கட்டணம் செலுத்திவிட்டேன். ஜூன் முதல் வாரத்தில் புத்தகம் தருகிறோம், வகுப்பு எடுக்கிறோம் என கூறினர். புத்தகமும் தரவில்லை, வகுப்பும் எடுக்கவில்லை.
இதற்கிடையில் பள்ளி நிர்வாகியின் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதனால் எங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைக்க அச்சமாக இருக்கிறது. எனவே டி.சி மற்றும் கட்டணம் திருப்பி கேட்கவும் பிள்ளைகளை அழைத்து பள்ளிக்கு வந்துள்ளேன்.
டி.சி, வாங்க விண்ணப்பம் கொடுத்துள்ளேன். ஒரு வாரம் கழித்து நேரில் வந்து பாருங்கள் என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டி.சி உறுதியா தருகிறேன் என கூறவில்லை. எனவே பெற்றோர்கள், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!