Tamilnadu
“டிரோன் கேமரா மூலம் கோவில் சொத்துக்களை கண்டறிய நடவடிக்கை” : அறநிலையத்துறை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்!
கோவில் சொத்துக்களை டிரோன் கேமரா மூலம் புவி சார்ந்த தகவல் அடிப்படையில் கண்டறிந்து வருவதாகவும், இந்த பணி விரைவில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தையும், பிரசித்திபெற்ற கோவில்களின் தனிப்பட்ட இணையதளங்களையும் முறையாக பராமரிக்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராதா ராஜன் கடந்த 2012ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு ஆண்டு நவம்பர் மாதம் முதல் நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், தமிழ்நாடு முழுவதும் கோவில்களின் மற்றும் அவற்றின் சொத்துக்களின் விவரங்கள், அந்த சொத்துக்கள் குத்தகையில் உள்ளதா, வாடகையில் உள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி நவம்பர் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். கோவில் சொத்துக்களை ஆய்வு செய்யும் அறநிலையத்துறையினருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் நான்கு நான்கு மாவட்டங்களாக தகவல் சேகரிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், கோவில் சொத்துக்களை கண்டறிவது மற்றும் சஎபார்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி அந்தச்திலான ஜெயபாரதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் காரணமாக நில அளவையர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் அப்பணிகளில் ஈடுபடுத்தப்படாததால், கோவில் சொத்துக்களை கண்டறிந்து ஆய்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்களை கண்டறிவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பரவால் ஆய்விற்கு அனுப்ப முடியவில்லை என்றும், அதற்கு மாற்றாக டிரோன் கேமரா மூலம் முப்பரிமாண அடிப்படையில் படமெடுக்கப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான நிலம் அல்லது கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து நீள, அகல, உயர அடிப்படையில் அறிந்துகொள்ளும் ஜி.ஐ.எஸ். எனப்படும் புவி சார்ந்த தகவல் முறையில் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவை ஆவணமாக மாற்றப்பட்டு அந்த சொத்தின் மதிப்பு கணக்கிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய வாடகை அல்லது குத்தகையின் நிலை உள்ளிட்ட் விவரங்களும், ஜி.ஐ.எஸ். விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பணிகள் துல்லியமான விவரங்களுடன் விரைவில் முடிக்கப்படும் எனவும் இந்துசமய அறநிலையத்துறை அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கினை ஜூலை 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!