Tamilnadu

”சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா?” - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி தொடங்குவதை அடுத்து, முதல் நாள் உரை நிகழ்த்தும் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து அழைப்பு விடுத்தார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்தக் கூட்டம் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஜூன் 21 அன்று காலை கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடக்கிறது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி முதல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. சட்டப்பேரவை தொடங்கும் முன் சட்டப்பேரவைத் தலைவர் ஆளுநரைச் சந்தித்து அழைப்பது வழக்கம். அதன்படி அவரைச் சந்தித்து அழைத்தேன். அவரும் மகிழ்வுடன் வருவதாக ஒப்புதல் அளித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும். எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடக்கும் என்பது குறித்து சட்டப்பேரவை ஆய்வுக்குழு ஜூன் 21 அன்று கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.

நீட் தேர்வு குறித்த பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும். விரைவில் நீட் தேர்வு குறித்து நல்ல முடிவு வரும். நேற்று கூட முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். ஆகவே, நீட் தேர்வு குறித்து நல்ல முடிவு வரும் என மக்கள் நம்புகிறார்கள்.

முதல் நாளே நாங்கள் சொல்லியிருக்கிறோம், முதல்வரும் சொல்லியிருக்கிறார். ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி அனைத்துக் கட்சியினருக்கும் நேரம் ஒதுக்கப்படும். முதலமைச்சர் அறிவித்த 14 வகை பொருட்களை அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் வழங்கச் சொல்லி முதலமைச்சர் கூறியுள்ளார். அதே ஜனநாயகம் சட்டப்பேரவையிலும் நடக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்தியாவில் குடியேறிய இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வேண்டும்": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை