Tamilnadu

கடந்தாண்டு மொபைல்போன்.. இப்போது பரிசுத்தொகை- அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க புதிய முயற்சி!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு, கொரோனா இரண்டாவது அலை பரவல் கணிசமாக குறைந்து வரும் சூழ்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் கடந்த 14ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5% மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுப் பள்ளியில் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பரிசு வழங்கி வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2021-2022 கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. இப்பள்ளியில் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் என்பவர் தனது சொந்த செலவில் ரூ.1,000 வழங்கி வருகிறார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஜூன் 14ஆம் தேதி முதல், பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாடபுத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில், படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது புதியாக முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களுடன் தனது சொந்த செலவில் 1,000 ரூபாயை தலைமை ஆசிரியர் வழங்கினார். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டில் இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களை தலைமை ஆசிரியர் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், அரசுப் பள்ளியில் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. என்னால் முடிந்த விஷயங்களை செய்து பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வருகிறேன்.

கடந்த ஆண்டு செல்போன் கொடுத்த நிலையில், தற்போது ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணம் கொடுத்து வருகிறேன். இதனால் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சி உண்டாவதால் இதனை தொடர்ந்து செய்து வருகிறேன் எனக் கூறினார். தலைமையாசிரியரின் இச்செயல் சுற்றுவட்டார கிராம மக்களிடையே மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Also Read: “அ.தி.மு.க ஆட்சியில் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் ‘TAB’ வழங்கப்படும்” : அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!