Tamilnadu

கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த தி.மு.க எம்.பி!

சென்னை திருவெற்றியூரில் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்குச் சென்ற தி.மு.க மக்களவை உறுப்பினர் கலாநிதி வீரசாமி நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்தவருக்கு, மருத்துவரான கலாநிதி வீராசாமி மற்றும் மருத்துவர்கள் மதன்குமார், கார்த்திகேயன் அடங்கிய குழுவினர், முக எலும்பு மற்றும் கண்ணில் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவருக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரது வலப்புற கண் முற்றிலுமாக அகற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்பு குறைவான நோயாளிகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழ்நாட்டுக்குக் கருப்பு பூஞ்சைக்குத் தேவையான Amphotericin-B மருந்தை நாளொன்றுக்கு 4 ஆயிரம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

Also Read: “தி.மு.க தேர்தல் அறிக்கையின்படி இந்த மாத இறுதிக்குள் கொரோனா நிவாரணம் ரூ.4,000”: அமைச்சர் மா.சுப்பிரமணியன்