Tamilnadu

“மீனவர்களுக்கான அனைத்து திட்டங்களும் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்”: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தூத்துக்குடி மாவட்டம் சிங்கி துறை, கொம்புத்துறை, அமலிநகர் ஆலந்தலை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பாரம்பரிய நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள் இந்த மீனவர்களுக்கு, பாரம்பரிய நாட்டுப் படகுகளில் வெளி பொருத்தும் இயந்திரங்கள் வழங்க வேண்டும் என மீனவ கிராமத்தினர் தமிழ்நாடு அரசுக்கும் மீன்வளத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து சிங்கிதுறை, கொம்புத்துறை, அமலிநகர், ஆலந்தலை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 25 மீனவர்களுக்கு மானிய விலையில் பாரம்பரிய நாட்டுப் படகுகளுக்கு வெளிப் பொருத்தும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, 25 மீனவர்களுக்கு நாட்டு படகுகளுக்கான இயந்திரங்களை வழங்கினார் .

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “மீனவர்களுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களும் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் மீனவர்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும்.

தற்போது மானிய விலையில் படகுகளுக்கான இயந்திரங்கள் பெரும் மீனவர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் மானிய விலையில் இயந்திரங்கள் பெற முடியும் என்ற நிலை உள்ளது இதை மாற்றும் வகையில் இரண்டு ஆண்டுகளில் மானிய விலையில் படகுகளுக்கான இயந்திரங்கள் வழங்குவதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்.

இதுபோல் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தரமான மீன் சந்தை அமைக்கப்பட்டு சில்லரை விற்பனையில் மீன்கள் விற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் படகுகளுக்கு வேண்டிய இயந்திரங்கள் அதிக விலையில் வாங்கப்பட்டு வருகிறது.

இதனால் மீனவர்கள் மானியம் போக அதிகளவிலான பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதை போக்கும் வகையில், படகுக்கான இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் நேரடியாக குறைந்த விலையில் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" என்றார்.

முன்னதாக ஆத்தூர் பகுதியில் சமூக ஆர்வலர் சார்பில் நடைபெற்ற கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சுமார் 250 பொது மக்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

Also Read: “தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை இன்று 1 கோடியை எட்டிவிடும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்