Tamilnadu
“சிறப்பான ஆட்சியை கட்டமைத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் பாராட்டு!
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து விரைவில், முழுமையாக மீண்டு இயல்பு வாழ்க்கையை தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தினகரன் தலையங்கம் தீட்டியுள்ளது.
‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-
ஒரு புதிய அரசு தன்னை நிலைநிறுத்தி செயல்படுவதற்கே 3 முதல் 6 மாதங்கள் வரை பிடிக்கும். ஆனால், பொறுப்பேற்ற நாள் முதல் சரியான திட்டமிடலோடு ஆட்சியை நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். இதற்கான உதாரணமாக ‘வார் ரூம்’ எனப்படும் கொேரானா பெருந்தொற்று கட்டளை மையத்தை குறிப்பிடலாம்.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு / தனியார் மருத்துவமனைகளில் படுக்கை உள்ளிட்ட வசதிகளை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. தற்போது 104 என்ற இலவச எண்ணுக்கு அழைத்தால் படுக்கை உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீண் அலைச்சலை தவிர்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. முதலில் சென்னையில் துவக்கப்பட்ட வார் ரூம், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் சரியான நேரத்தில் அனுமதிக்கப்படும் ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து குணமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும், கொரோனா 2வது அலையால் மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க, ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியபோது இதுபோன்ற தற்காலிக மருத்துவ மையங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோன்று, தமிழகத்தின் பிரதான மாவட்டங்களிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் துரிதமாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மறுபுறம் அலோபதி சிகிச்சைகளை ஏற்க மறுப்பவர்களுக்காக, சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையமும் துவக்கப்பட்டுள்ளது. கொரோனா 3வது அலை வந்தாலும், சமாளிக்கும் அளவுக்கான மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவிக்கிறார். முதல்வரை போலவே, அவரது அமைச்சரவை சகாக்களும் திறம்பட செயலாற்றி வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் மற்ற மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சியினரும் பாராட்டுமளவுக்கு சிறப்பான ஆட்சியை கட்டமைத்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.
‘கொரோனா நிவாரணம், மளிகைத்தொகுப்பு போன்ற நிவாரண திட்டங்களை ஏன், நம் மாநிலத்திற்கு வழங்க முடியவில்லை’ - என கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நம் மாநிலத்தை சுட்டிக்காட்டி பேசியிருப்பதை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
தடுப்பூசிக்கு சர்வதேச டெண்டர் கோரியது, தமிழக தேவைகளுக்காக செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்காக, மாநில அரசுக்கு குத்தகை கேட்டு ஒன்றிய அரசிடம் கோரியது என கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டிற்குரியதாக உள்ளன.
இதனால் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. விரைவில், முழுமையாக மீண்டு இயல்பு வாழ்க்கையை தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!