Tamilnadu
“கொரோனாவால் பெற்றோரை இழந்த 68 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து கணக்கீடு” : அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இதுவரை 68 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் தொடர்ந்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கீதா ஜீவன் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிவாரண பொருட்களாக அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி உள்பட 25 பொருட்கள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “தமிழ்நாடு அரசு கொரோனா பரவலை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1600-லிருந்து 318 ஆக குறைந்துள்ளது.
கொரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுபோல் திருநங்கைகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 68 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், பெற்றோரில் ஒருவரை இழந்து தவிக்கும் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு வருவாய்த்துறை மூலமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!