Tamilnadu

“14 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி”: அமைச்சர் CV.கணேசன் எச்சரிக்கை

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் துறையின் பணித்திறனாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலன் துறையின் இயக்குனர் செந்தில் குமார், இணை இயக்குனர்கள் ஜவஹர், குமார், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொழிலாளர் நலன் துறையில் மேம்படுத்தப்பட வேண்டியவை, உள்ளிட்டவை குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு முழுவதும் சுமார் 47,000 தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

பட்டாசு ஆலையில் அவ்வப்போது நடக்கும் தீ விபத்து குறித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், பட்டாசு ஆலைகள் இயங்கும் இடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியாக குழு அமைக்கப்பட்டு விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், நாளை உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுவது குறித்துப் பேசிய அமைச்சர், 14வயதிற்கு கீழுள்ள குழந்தைகளை சட்டவிரோதமாக பணியமர்த்தினால் 6மாதம் முதல் 2ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும் எனவும், தேவைப்பட்டால் 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றார்.

Also Read: நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த தி.மு.க MLA.. உறவினர்கள் பாராட்டு!