Tamilnadu
ஜூன் 21 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கும்- நேரலை குறித்து பரிசீலனை : சட்டப்பேரவை தலைவர் அறிவிப்பு!
ஜூன் 21 முதல் ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டப்பேரவை, கடந்த மே 7 அன்று பதவியேற்றது. இதையடுத்து நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது ஆளுநர், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம் கேட்டறிந்தார். இந்தச் சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்நிலையில், ஜூன் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
பேரவையில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும், அலுவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என முடிவு செய்யப்படும்.
பேரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து கூட்டத்தொடரை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!