Tamilnadu
“தடுப்பூசி விநியோகத்தில் வியாபாரம் செய்யாமல் மக்களை காக்க வேண்டும்” : ‘தினகரன்’ தலையங்கம் வேண்டுகோள்!
தடுப்பூசி விநியோகத்தில் வியாபாரம் செய்யாமல், மக்கள் நலன் கருதி ஒவ்வொரு நாடும் தங்களால் இயன்ற அளவில் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு அளித்து, பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டும் என தினகரன்’ தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.
‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-
அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து மீள, தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி அவசியம் போட வேண்டும். குறிப்பிட்ட ஒரு நாட்டில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், அந்நாட்டிற்கு, தடுப்பூசி செலுத்தாத நாடுகளை சேர்ந்தவர்கள் வர முடியாது. எனவே, ஒட்டு மொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனத்துக்கு உள்ளது. இவ்விஷயத்தில் ஒவ்வொரு நாட்டின் பங்களிப்பு மிக அவசியம். மக்கள் உயிர் காக்கும் விஷயத்தில் பாரபட்சம் வேண்டாம்.
வளர்ந்த நாடுகள், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகள் தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு வயதானவர்களுக்கு கூட தடுப்பூசி செலுத்த முடியவில்லை என்பது தான் வேதனை. ஒரு நாடு மட்டும் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது இயலாத காரியம்.
இதில் அதிக காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஒவ்வொரு நாடும் தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் கூடுதல் தடுப்பூசிகளை பெற உலக சுகாதார நிறுவனம் முயற்சி செய்ய வேண்டும். வறுமையில் பின்தங்கியுள்ள நாடுகளில் ஊரடங்கு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டின் தடுப்பூசி காப்புரிமை மற்றும் மூலப்பொருட்களை பிற நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன் வர வேண்டும்.
அப்போது தான் தடுப்பூசி உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க முடியும். பணம் மட்டும் தான் முக்கியம் என்று நினைத்தால், உலகில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது இயலாத காரியம். தடுப்பூசியை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம். பெருந்தொற்றில் இருந்து உலகம் மீள அனைத்து நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.
முக்கியமாக, சர்வதேச விமான சேவை, கடல்வழி போக்குவரத்து, கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வழக்கம் போல் நடக்க வேண்டும் என்றால், உலகில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம். அப்போது தான் வளர்ச்சி என்ற பாதையில் ஒவ்வொரு நாடும் பயணிக்க முடியும்.
போர் மூண்டால் நவீன ஆயுதங்களுக்கு கிராக்கி ஏற்படும். இதன் மூலம் ஆயுதம் விற்கும் நாடு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும். இதைப்போல், கொரோனா தடுப்பூசி மூலம் சம்பாதிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டியது அவசியம். தடுப்பூசி விநியோகத்தில் வியாபாரம் செய்யாமல், மக்கள் நலன் கருதி ஒவ்வொரு நாடும் தங்களால் இயன்ற அளவில் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு அளித்து, பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?