Tamilnadu

“6 மாதங்கள் அவகாசம் வழங்கக் கோரவேண்டும்” - 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் செலுத்த அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கியை வலியுறுத்துமாறு 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள், இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி, 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றைப் பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்னும் கருத்தினை மாநில முதலமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டினோம். ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்திய நிலையில், நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, பிரதமர் தனது முந்தைய கொள்கையை நேற்று மாற்றியமைத்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கொரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

2021 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை என்பதால், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுளேன்.

எனவே, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்துச் சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என முதலமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: முப்பதே நாளில் முழு முதலமைச்சர்; இனி எந்த அலையையும் மு.க.ஸ்டாலின் என்ற மலை தடுக்கும்! - ப.திருமாவேலன்