Tamilnadu
"கொரோனாவை போல் கருப்பு பூஞ்சை பரவாது... வதந்திகளை நம்பவேண்டாம்" : மருத்துவர் வெங்கடேஷ் பிரஜனா விளக்கம்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மற்றொரு பக்கமோ கருப்பு பூஞ்சை என்று சொல்லக்கூடிய மியூகோர்மைகோசிஸ் நோயும் இந்தியாவில் பரவி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
நாடு முழுவதும் கருப்பு பூஞ்சைக்கு 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 673 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பாதித்த அணைவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் வராது என்றும் கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயாளிகளை மட்டுமே அதிகமாக இந்நோய் தாக்கும் என்றும் கொரோனாவை போல் இது பரவக்கூடியது அல்ல என்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் கல்வித்துறை தலைவர் மருத்துவர் வெங்கடேஷ் பிரஜனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: முதலில் மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை மூலம் பரவக்கூடிய இந்த நோய் கருப்பு பூஞ்சை நோயே கிடையாது. கருப்பு பூஞ்சைக்கும் இந்த நோய்க்கும் சம்பந்தமே இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகள் கருப்பு நிறத்தில் மாறுவதால் கருப்பு பூஞ்சை என்று சொல்கின்றனர்.
மேலும், பழங்காலம் முதல் இருக்கக்கூடிய நோய். கொரோனா நோயைப் போல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இந்த நோய் உறுதியாகப் பரவாது. இந்த நோய் பற்றிய வதந்திகள் மக்களிடம் தவறாக பரவிக் கொண்டிருக்கிறது.
சர்க்கரை நோய் கட்டுப்பாடில்லாமல் சென்று நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது மூக்கு வழியாக கண்ணுக்குப்போய் மூளைக்கு செல்கிறது. இதை ரைனோசெரிபிரலர்பார் மியூக்கோர் என்பார்கள். மற்றொன்று மூக்கு வழியாக நுரையீரல் செல்வதை பல்மனரி மியூகோர் என்று சொல்வார்கள்.
ஒரு பக்கம் கன்னத்தில் உணர்வின்மை மற்றும் அதீதவலி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மின்சாரம் மாதிரி பாய்கிற வலி. மூக்கடைப்பு, மூக்குவலி, மூக்கு ஒழுகுவது, கண் சிவப்பது, பார்வை இரட்டை இரட்டையாக தெரிவது போன்றவை இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை கண்ணுக்கு கீழ் உள்ள சைனஸ் கீழ் பரவுகிறது.
சைனசஸ்க்கு மேல் கண் உள்ளது. சைனஸில் இருக்கும்போது கவனிக்காமல் இருந்தால் சைனஸின் மேல் உள்ள எலும்பினை ஊடுறுவி கண்ணுக்கு சென்றுவிடுகிறது. கண்ணை தாண்டினால் மூளைக்கு சென்றுவிடுகிறது. மூளைக்கு சென்றால் மட்டுமே இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும். உயிருக்கு ஆபத்தாகிவிடுகிறது.
மற்றபடி ஆரம்பத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்தால் சிகிச்சை அளிப்பது மிக எளிது. அறிகுறி தெரிந்தவுடன் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்தால் எண்டோஸ்கோப்பி மூலம் அரைமணி நேரத்தில் அதன் பாதிப்பை அறிந்துவிடலாம். சைனஸில் இருக்கிற பூஞ்சையை அகற்றி அதில் லிப்போசோமால் ஆம்போடெரிசின் (liposomal amphotericin) மருந்து போட்டால் குணமடையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: இந்து தமிழ் திசை
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!