Tamilnadu

“+2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? - முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார்” : அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மருத்துவ, உளவியல் நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டிருப்பதாகவும், இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் எனவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு விவாதித்து வருகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக கடந்த 2 நாட்களாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகப் பள்ளிக் கல்வித்துறைக்குத் தெரிவித்தனர்.

இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காணொலிக் காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க, ம.ம.க, கொ.ம.தே.க, த.வா.க, புதிய பாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு மருத்துவ நிபுணர்களுடனும், உளவியல் நிபுணர்களுடனும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சியினருக்கும் நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தோம்.அவர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை எடுத்துக் கூறினர். அவர்களுக்குத் தி.மு.க சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றக் கட்சிப் பிரதிநிதிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சி.எம்.சி தலைவர், ஐ.சி.எம்.ஆர் பிராந்தியத் தலைவர், மனநல நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல மருத்துவத் துறை நிபுணர்களும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.

அனைவரின் கருத்துகளையும் தொகுத்து விரிவான அறிக்கையாக மாற்றி முதலமைச்சரிடம் நேரடியாக அளிக்க உள்ளோம். அனைத்துத் தரப்பினரும் கூறிய ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு முதல்வரிடம் இதுகுறித்துத் தெரிவிப்போம். இறுதி முடிவை முதலமைச்சர்தான் எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, +2 தேர்வு குறித்த பல்வேறு தரப்பினரின் கருத்துகள் உள்ளடங்கிய அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Also Read: “தையல் மெஷின் கேட்டேன்.. உயர்கல்வி படிக்க வைக்கிறேன் என்றார் அமைச்சர்” - பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி!