Tamilnadu
“காயிதே மில்லத் வழியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் அவர்களின் 126-ஆவது பிறந்தநாளில், அவர் உருவாக்கிய மதநல்லிணக்கம் காப்போம். அவரைப் போலத் தமிழ்ப் பற்றாளர்களாக - தமிழ்நாட்டு வளர்ச்சிக்குப் பாடுபடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை பின்வருமாறு :-
'கண்ணியத் தென்றல்' காயிதே மில்லத் அவர்களின் 126-ஆவது பிறந்தநாளான இன்று, அவர் துயிலும் இடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வரிசையில் போற்றி வணங்கத்தக்க தலைவர்களில் ஒருவர்தான் நம்முடைய காயிதே மில்லத் அவர்கள். காயிதே மில்லத் அவர்கள் இந்திய நாட்டையும், தாய்மொழியாம் தமிழ்மொழியையும் காப்பாற்றத் தொண்டு செய்தவர் ஆவார்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அவையில் நடந்த விவாதத்தின் போது, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வரச் சிலர் முயன்றார்கள். அப்போது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் நம்முடைய காயிதே மில்லத் அவர்கள். இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கக் கூடாது என்று சொன்னவர் மட்டுமல்ல, தமிழைத் தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று சொன்ன தமிழ் வீரர் தான் நம்முடைய கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் அவர்கள்.
1965-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மூலமாக இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வந்தபோது, இந்தியாவைக் காக்கத் துடித்தவர் காயிதே மில்லத் அவர்கள் !
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணாவுக்கு அப்போது தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள்!
1972-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் நாள் காயிதே மில்லத் அவர்கள் மறைந்தார்கள். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது என்ற செய்தி கிடைத்தபோது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோவையில் இருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டதும் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டுச் சென்னை வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றார்கள்.
கண்மூடிப் படுத்திருக்கிறார் காயிதே மில்லத் அவர்கள். அப்போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ”அய்யா! நான் கருணாநிதி வந்திருக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார்கள். லேசாகக் கண் திறந்து பார்க்கிறார் காயிதேமில்லத் அவர்கள். முதலமைச்சர் கலைஞரைப் பார்த்தார். கை நீட்டி கலைஞரின் கையைப் பிடிக்கிறார்.
“முஸ்லீம் சமுதாயத்துக்கு தாங்கள் செய்த உதவிக்கெல்லாம் எனது நன்றி" என்று காயிதேமில்லத் அவர்கள் சொன்னார்கள். அத்தகைய நெருக்கமான நட்பு காயிதே மில்லத் அவர்களுக்கும் நம்முடைய தலைவர் கலைஞருக்கும் உண்டு.
காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்கியவர் கலைஞர். காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர். காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் கலைஞர். அத்தகைய பெருமகனார் காயிதேமில்லத் அவர்களது நினைவை எந்நாளும் போற்றுவோம். அவர் உருவாக்கிய மதநல்லிணக்கம் காப்போம். அவரைப் போலத் தமிழ்ப் பற்றாளர்களாக - தமிழ்நாட்டு வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!