Tamilnadu

“12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யும் ஒன்றிய அரசு, ‘நீட்’டை ரத்து செய்ய மறுப்பது ஏன்?” : கி.வீரமணி கேள்வி!

சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் ஒன்றிய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது? இதில் உள்ள சூது சூட்சமத்தைப் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது. தமிழ்நாடு அரசு பிளஸ் டூ என்ற பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல், மாணவர்கள் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. (CBSE) நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.

‘நீட்’ தேர்வை ரத்து செய்யவில்லை!

ஆனால், அதே காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு என்ற நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை! அதை நடத்தியே தீருவோம் என்று கூறுகிறார்கள்!.

சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வித் துறையின்கீழ் இயங்கும் செகண்டரி பள்ளித் தேர்வின் மதிப்பெண்கள், அதுபோலவே பிளஸ் டூ மெட்ரிகுலேசன் பள்ளித் தேர்வு என்ற மாநில பள்ளிக் கல்வித் துறை நடத்தும் தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டுதானே ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

பெற்றோர் - ஆசிரியர்கள் - வல்லுநர்களின் கருத்தை தமிழக அரசு கேட்டிருக்கிறது!

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு இதுவரை கொரோனாவின் வீச்சால் தள்ளிப் போடப்பட்டுள்ளது. சில மாதங்கள் கழித்து நிலைமை ஓரளவு சரியான பிறகு, பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்ற நிலையில், மத்திய கல்வித் துறை சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்ததால், தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்று கருத்துக் கூறுமாறு, பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்களின் கருத்தை - மக்களாட்சியின் மாண்புக்கேற்ப கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

எட்டாவது, பத்தாவது வகுப்புத் தேர்வின் நிலை வேறு. பிளஸ் டூ வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள்தான் அவர்கள் மேலே கல்லூரியில், பல்கலைக் கழகங்களில் சேர்ந்து தொழிற்படிப்போ, மருத்துவப் படிப்போ, பட்டப் படிப்போ படிப்பதற்கு அடிப்படை கட்டுமானமாக அமையும் நிலை உள்ளது. மாணவர்களின் நலனா? வெறும் தேர்வா? எனும்போது, முக்கியத்துவம் மாணவர்களின் உயிர்தானே என்று கூறத் தோன்றும்.

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் முடிவு எடுக்கப்படவேண்டும். ஆனால், அதேநேரத்தில், அறிவுபூர்வமாக ஆழமாகச் சிந்தித்தால், மாணவர்கள் உயிருக்கும், உடல்நலத்துக்கும் பாதிப்பு வராத அளவுக்கு இப்பிரச்சினையில், ஒரு சிறந்த முடிவை எடுப்பது அவசியம்; அவர்களது எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான முடிவு எடுக்கப்படவேண்டும்.

இந்தத் தேர்வினை மேலும் தள்ளிப் போடுவதோடு, நிலைமை சற்று தணிந்துவரும்போது, அத்தேர்வை போதிய - தக்க பாதுகாப்பு முன்னேற்பாட்டுடன் எழுத வைப்பதுபற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை யோசிப்பதும், முடிவு எடுப்பதும் இன்றியமையாத ஒன்றாகும்.

தேர்வு நடத்தும் கூடங்களில் நல்ல இடைவெளி அமைத்து, தக்க சுகாதார பாதுகாப்பினை ஏற்படுத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை மய்யங்களில் குறைத்து, மய்யங்களையும், மேற்பார்வையாளர்களையும் அதிகரித்து, முகக்கவசம் மற்ற முன்னெச்சரிக்கையுடன் நடத்த யோசிப்பது நல்லது. சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?. இதில் உள்ள சூது சூட்சமத்தைப் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.

நுழைவுத் தேர்வை திறனறிவுத் தேர்வு என்று ஆக்கி, பள்ளிப் பாடத் திட்டங்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை தங்களது முழு அதிகாரத்தின்கீழே -(ஏற்கெனவே கொண்டு வந்துள்ள கல்வியை )மத்திய அதிகாரமே ஆக்கிரமித்துக் கொண்ட நிலையை மேலும் ஆணியடிப்பதோடு, கல்லூரிகளில் நுழையவே இதுபோன்ற நுழைவுத் தேர்வே மீண்டும் என்பதைத் திட்டமிட்டு புகுத்தவே இந்த ஏற்பாடு நடத்தப்படுகிறதோ என்ற அய்யம் பரவலாக பல பகுதிகளில் நிபுணர்களிடையே, கல்வியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கும் பேராபத்து!

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பிளஸ் டூ பொதுத் தேர்வை ரத்து செய்தால், அது தகுதி திறமை பேசி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குத்தும் - காலங்காலமாய் நடந்துவரும் சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பதாகவே ஆகிவிடும் பேரபாயம் உள்ளது. காரணம், பிளஸ் டூ மதிப்பெண் - மேற்படிப்பாகிய தொழிற்கல்லூரி, பல்கலைக் கழக பட்டங்களுக்கு நுழைவு வாயில் ஆகும்.

கலைஞர் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டுவரப்பட்ட சட்டம்...

தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை நடத்துவதோடு, அந்த அடிப்படையில் ஏற்கெனவே கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் சட்டம் (T.N.Act 3 of 2007 Admission in professional Education Act) இன்னமும் ரத்து செய்யப்படாத அமலில் உள்ள ஒரு சட்டமாகவே இருப்பதைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசே மருத்துவக் கல்லூரிகளுக்குத் தகுதியுள்ள மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்ய சட்டப்படி நமக்கு உரிமை உள்ளது. கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை மாநில அதிகாரத்தின் பட்டியலில் உள்ளது.

‘‘ஒப்புக்கு அழுதவர்கள்’’ ஆனார்கள்!

முன்பிருந்த அரசுகள் ஏனோ இதுபோன்ற சட்ட நுணுக்கத்தை நாம் பலமுறை சுட்டிக்காட்டியும், காதில் போட்டுக் கொள்ளாமலேயே ‘‘ஒப்புக்கு அழுதவர்கள்’’ ஆனார்கள்!

எனவே, இந்தக் கோணத்திலும் நமக்குப் பிளஸ் டூ மதிப்பெண் - தேர்வுமூலம் - சட்ட வலிமையைக் கூடுதலாக்கப் பயன்படும்.

மத்திய அரசு இவ்வளவுப் பிடிவாதம் காட்டுவது ஏன்?

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, முதலாண்டு ‘நீட்’ தேர்வு விலக்கு நடைமுறைக்கு வந்ததால் என்ன கெட்டுப் போய்விட்டது?. இந்தக் கொரோனா காலத்தில், ‘நீட்’ தேர்வை ரத்து செய்தால் வானம் இடிந்து விடுமா?. ‘நீட்’ தேர்வுக் குழுவை அமைத்திருப்பதே அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளுக்கு முரண்பாடான நிலைப்பாடு என்பது மேலும் உரிய முறையில் எடுத்து வைத்து - அறிவு கொளுத்தி வாதாடவில்லை. இப்போது அது காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல், மாணவர்கள் நலன், பாதுகாப்பை உறுதி செய்க!

எனவே, தமிழ்நாடு அரசு பிளஸ் டூ என்ற பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல், மாணவர்கள் நலன், பாதுகாப்பை உறுதி செய்து - தேர்வை நடத்துவதும், அதன் அடிப்படையில் தொழிற்படிப்பு, பட்டப் படிப்புகளுக்கு நுழைவு வாயில் உருவாக்குவதும் அவசியம் என்பது நமது உறுதியான கருத்து, வேண்டுகோள்.தமிழ்நாடு முதலமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், அத்துணைப் பேரும் ஆழ்ந்து இதனை பரிசீலிப்பார்களாக!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “12ம் தேர்வு கிடையாது என்பது ஒன்றிய அரசின் சூழ்ச்சியே - ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை?”: வைகோ கேள்வி!