Tamilnadu
“ஊரடங்கு நேரத்தில் அன்றாட வாழ்க்கைக்கு தமிழக அரசின் பண உதவி வரவேற்கத்தக்கது” : தினத்தந்தி தலையங்கம்!
“ஊரடங்கு நேரத்தில் அன்றாட வாழ்க்கைக்கு தமிழக அரசின் பண உதவி வரவேற்கத்தக்கது” என தினத்தந்தி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
”கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே ஒரு வாரம் தளர்வுகளில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் ஒருவாரம், அதாவது 7-ந்தேதி காலை 6 மணிவரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் ஊரடங்கிலேயே மக்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, உள்ளாட்சிகள் மூலமாக நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை நடந்தது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் காய்கறி, பழங்கள் விற்பனை அதைப்போலவே தொடருகிறது. மளிகைப்பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைக்காரர்களால், வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனைசெய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. ரேஷன்கடைகளில் கோதுமை மாவு (ஒரு கிலோ), உப்பு (ஒரு கிலோ), ரவை (ஒரு கிலோ), சர்க்கரை, உளுத்தம்பருப்பு (தலா 500 கிராம்), புளி, துவரம்பருப்பு (தலா 250 கிராம்), கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள் (தலா 100 கிராம்), குளியல்சோப்பு (125 கிராம்), சலவைச்சோப்பு (250 கிராம்) ஆகியவை அனைத்து அரிசி குடும்பஅட்டைதாரர்களுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போதைய நிலையில் பொருட்கள் கிடைப்பதற்கு எந்தவித தடையுமில்லை. ஆனால் பொருட்களை வாங்குவதற்குதான் மக்கள் கையில் பணமில்லை. ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பினால், நிறைய தொழில்கள், வணிகம் நலிவடைந்த நிலையில் பலர் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
வருமானக்குறைவால் ஏராளமானோர் வாடுகின்றனர். அதிலும் அன்றாடம் வேலைபார்த்தால்தான் கையிலே பணமிருக்கும் என்ற நிலையில் உள்ள நிறைய தொழிலாளர்கள் குறிப்பாக, சுமைதூக்குபவர்கள், கட்டிட வேலைத்தொழிலாளர்கள், பார வண்டியிழுப்பவர்கள், ஆட்டோ மற்றும் ரிக்ஷா டிரைவர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன்கள், சாலையோர மெக்கானிக்குகள், இஸ்திரி வண்டி வைத்து பிழைப்பு நடத்துபவர்கள், சாலையோரங்களில் தையல்கடை வைத்திருப்பவர்கள், இப்போது மூடப்பட்டிருக்கும் கடைகளில் வேலை பார்த்தவர்கள் மற்றும் சாலையோரங்களில் பூக்கடை போன்ற பல சிறுசிறு வியாபாரம் செய்பவர்கள் என ஏராளமானோர் வேலையிழந்து கையிலே பணமில்லாமல் என்ன செய்வது? என்று திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.
இப்போதைய சூழ்நிலையில் பொருட்கள் தாராளமாக கிடைக்க வழிவகுத்த நிலையில், அவர்களுக்கு அதை வாங்குவதற்கும், அவசர தேவைகளுக்கும் கையில் பணம்வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல, அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.4ஆயிரம் வழங்கப்படும் என்பதை நிறைவேற்றும் வகையில், ஏற்கனவே ரூ.2ஆயிரம் வழங்கப்பட்டுவிட்டது. இப்போது மேலும் ரூ.2ஆயிரம் கலைஞர் பிறந்தநாளையொட்டி, வழங்கப்பட இருக்கிறது. இது நிச்சயமாக வரவேற்புக்குரியது. ஆனால் இது போதாது. மத்தியஅரசாங்கமும் கைக்கொடுக்கவேண்டும்.
வறுமை ஒழிப்பில் ஆற்றிய பணிகளுக்காக நோபல் பரிசுப்பெற்ற அபிஜித் பானர்ஜி, “இந்தநேரத்தில் ஏழை-எளிய மக்கள் கையில் பணம் வழங்குவது மிகவும் முக்கியமானது. தமிழகஅரசு ரேஷன்கடை மூலம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பணம் வழங்குவதுபோல, மத்திய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதும், ரேஷன்கடைகள் மூலமாக அதிகளவில் பணப்பரிமாற்றம் செய்வதும் மிகமிக முக்கியமானது. இந்தநேரத்தில் ஏழைமக்களுக்கு தேவையான பணஉதவியை செய்வதற்கும், தடுப்பூசி மருந்துகளுக்கு செலவழிப்பதற்கும், பணம் அச்சடிப்பதுகூட சாலச்சிறந்தது என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பணமாக வழங்குவதுபோல, மத்திய அரசாங்கமும் தற்போது மாநில அரசுகள் மூலமாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பணமாக வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்தால் பொதுமக்களுக்கு ஊரடங்கு வலிக்காது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கும், தேவையான பொருட்களை வாங்குவதற்கும் வசதியாக இருக்கும்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!