Tamilnadu

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து: உடனே சீரமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்திற்குத் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவைச் சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து வணங்கிச் செல்வதால் அந்த கோவிலைப் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வழிபடுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு, பூசாரிகள் கருவறைக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

அப்போது, திடீரென கருவறையின் கூரையில் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்த தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் தக்கலை மற்றும் குளச்சல் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் மூலமாக துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டது.

இதற்கிடையே பொதுமக்களும் அங்கு திரண்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ பாராதனை முடித்து வைக்கப்பட்டிருந்த தீபத்திலிருந்து கருவறையில் தீப்பற்றிப் பிடித்து இருக்கலாம் என்ற சந்தேகம் பக்தர்களால் முன்வைக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இது பற்றி தகவல் அறிந்த உடனே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் முக்கிய பிரகாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனார்.

மேலும் இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “குமரி மாவட்டத்தின் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் முக்கிய பிரகாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்தேன். கோவிலின் பழமை மாறாமல் தமிழக அரசு சார்பில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தீ விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை தொடர்பு கொண்டு விசாரித்ததார். நாளை மறுநாள் அறநிலையத்துறை அமைச்சர் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட உள்ளதார். மேலும் விபத்தில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சரி செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு தாயாகவே மாறிவிட்டார்” : கோவை ESI மருத்துவமனை டாக்டர் இரவீந்திரன் நெகிழ்ச்சி!