Tamilnadu

“அன்று பெரியார் செய்ததை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார்” : முரசொலி தலையங்கம் புகழாரம் !

தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்த காலத்தில் பிளேக் நோய் காரணமாக நிறைய மக்கள் இறந்தார்கள். அது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பிக் கொண்டு இருந்தது. இறந்த உடலைக் கூடத் தொட்டுத் தூக்கி அடக்கம் பண்ண ஊழியர்கள் முன் வராத நேரத்தில், நகராட்சித் தலைவரான தந்தை பெரியார் அவர்களே, சில உடல்களைத் தானே தூக்கிச் சென்று அடக்கம் செய்தார்.

படிக்கும்போது இன்று அது ஒரு வரலாற்றுச் செய்தி. ஆனால் அந்தக் காலத்தில் மக்களுக்கு அது எத்தகைய நம்பிக்கையை விதைத்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அதனால்தான் அவரை தொண்டு செய்து பழுத்த பழம் என்று எழுதினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!

இதோ 100 ஆண்டுகள் கழித்து வரலாறு திரும்புகிறது. பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின், முத்தமிழறிஞர் கலைஞரின் வார்ப்பாக இன்றைக்கு இருக்கின்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலம் பெற்று வருபவர்களை அதற்கான உடையை தானே போட்டுக் கொண்டு சென்று பார்த்துள்ள நிகழ்வு பெருமைக்குரியதாகவும், போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகவும் இருக்கிறது.

கொரோனா என்பது நோய் மட்டுமல்ல; பயம், பீதி, அச்சம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அந்த பயத்தை, பீதியை, அச்சத்தை போக்கி இருக்கிறார் முதல்வர். “தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!” என்று அடக்கத்துடன் தனது செயலை முதல்வர் அடையாளப்படுத்தி இருக்கிறார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி - இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முழுப் பாதுகாப்பு கவச உடை தாங்கி முதல்வர் சென்றது, மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் செயல் மட்டுமல்ல. முதல்வரின் துணிச்சலைக் காட்டுகிறது. தொண்டின் துணிச்சல் வடிவமாகக் காட்சி தருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இது மருத்துவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ஒருவித துணிச்சலையும் சேர்த்துக் கொடுத்துள்ளது. இதனை சிவகங்கையைச் சேர்ந்த Dr.A.B ஃபரூக் அப்துல்லா தனது முகநூலில் மூன்று கருத்துக்களைச் சொல்லி பாராட்டி இருக்கிறார்.

“மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவச உடைஅணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கியிருப்பது மேன்மைக்குரிய செயல். இதன் மூலம் மூன்று விசயங்களை அவர் மக்களுக்குக் கூற வருகிறார்.

*ஒன்று : கொரோனா என்பது அருவருக்கத்தக்க நோய் அன்று. கொரோனாபாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நமது கரிசனத்துக்கும் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரியவர்கள். எனவே அவர்களை ஒதுக்கி விடக்கூடாது.

* இரண்டு : கவச உடை தரும் அசவுகரியத்தை ஏற்றுத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேல் பணிபுரிந்து வரும் முன்கள மருத்துவப் பணியாளர்களின் சுமையைத் தானும் தலைவனாக ஏற்கிறேன். இந்தச் சுமையை இறக்கி வைக்கும் பொறுப்பில், கடமையில் நானும் உங்களுடன் சேர்ந்தே பயணிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

* மூன்று : கொரோனா பெருந்தொற்றின் முக்கியமான இக்காலத்தில் களத்தில் பணி எப்படி நடக்கிறது என்பதை முதல்வரே நேரில் வந்து பார்வை இடுவது என்பது களப் பணியாளர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் செயலாக இருக்கிறது” என்று எழுதி இருக்கிறார்.

ஒரு தலைவராகவும், முதல்வராகவும் ஒருவரின் தலைசிறந்த செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை கோவையில் நடந்த நேற்றைய நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் எத்தகைய தலைவர், முதல்வர் என்பதை இது நாட்டுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “உங்கள் வீட்டுக்கு விளக்காவேன்; நாட்டுக்கு தொண்டனாவேன்; மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன்; மக்கள் கவலை களைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்!” என்று சொன்னார். இதோ இப்போது அப்படியே நடந்து காட்டி வருகிறார்! தொண்டின் துணிச்சல் வடிவமான அவர் வாழ்க!

Also Read: “ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #WeStandWithStalin.. எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது”: உதயநிதி ட்வீட்!