Tamilnadu

“ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BJPBetrayingTNPeople”: தடுப்பூசி விவகாரம் - தமிழகத்திற்கு துரோகம் இழைத்த பாஜக!

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தற்போதுவரை கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வு என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவற்கு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ள இந்தியாவில், தடுப்பூசி உற்பத்தி தொடர்பான முறையான திட்டமிட்டல் இல்லாததன் விளைவாக, நாடுமுழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு மக்கள் தொகையின் அடைப்படையில் தடுப்பூசிகளை வழங்காமல், பாரபட்சமான முறையில் தடுப்பூசி விநியோகம் செய்ததே இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

குறிப்பாக, தமிழகத்தை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜராத்துக்கு, தமிழகத்தை விட அதிகளவில் தடுப்பூசிகள் ஒதுக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில், தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை நிலவுகிறது.

இதனிடையே, ஒன்றிய அரசு தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜராத்துக்கு, தமிழகத்தை விட அதிகளவில் தடுப்பூசிகள் ஒதுக்கியுள்ளதை கண்டித்தும் ட்விட்டர் #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் ஒன்றிய அரசுக்கு எதிராக #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை 62% அதிகரிப்பு : விலை உயர்வு மூலம் மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

மேலும் சமூக வலைதளங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக எழுப்பட்ட கண்டன பதிவுகளும் கேள்விகளும் பின்வருமாறு : -

1. தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது கூடுதல் தடுப்பூசியை ஒதுக்குங்கள் என்று, மோடி அரசிடம் தமிழக அரசு கதறிக் கொண்டிருக்கும்போது, இரக்கமற்று மோடி அரசு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்?.

2. கொரோனாவினால் பொருளாதாரரீதியாக தமிழகம் தத்தளிக்கின்றன. தடுப்பூசி, கொரோனா தொற்று மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யுங்கள் என்று தமிழக முதல்வர் கேட்டும் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது மோடி அரசு.

3. போதிய தடுப்பூசிகளைத்தான் தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை, செங்கல்பட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசி மையத்தை குத்தகைக்குத் தாருங்கள் என்று, மோடி அரசிடம் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்து ஒருவாரமாகியும், மோடி அரசிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

4. தமிழகத்தைவிட குறைந்த மக்கள்தொகையுள்ள குஜராத் மாநிலத்திற்கு 1.32 கோடி தடுப்பூசிகளை ஒதுக்கிய மோடி அரசு, தமிழகத்திற்கு 68 லட்சம் தடுப்பூசிகளை மட்டும் ஒதுக்கி ஓரவஞ்சகம் செய்தது.

5. பட்டைத் தீட்டும் வைரத்திற்கு 0.2% ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்கும் மோடி அரசு, உயிர் காக்கும் ஆக்ஸிஜனக்கு 12% வரியை வசூலித்து மோடி அரசு கொரோனாவிலும் மக்களைக் கொள்ளையடிக்கிறது.

6. தற்போது டவ்தே புயல் குஜாத்தை தாக்கியது புயல் தாக்கிய மறுநாளே குஜராத்தின் பாதிப்பை சரிசெய்ய 1000 கோடியை மோடி அரசு ஒதுக்கியது. அதுவே 2020 ல் நிவர் புயல் தமிழ்நாட்டைத் தாக்கியபோது மூன்று மாதத்திற்கு பிறகு 63.14 கோடியை மட்டுமே ஒதுக்கி ஓரவஞ்சகம் செய்தது.

7. புதிய நாடாளுமன்றம், பிரதமர் வீடு ஆகியவை 971 கோடி ரூபாயில் கட்டுவதற்கான 'சென்ட்ரல் விஸ்டா' திட்டம் இந்த கொரோனா பேரிடரில் தேவையா? இதில்காட்டும் வேகத்தை தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதில் காட்டலாமே?

8. கொரோனாவால் மூச்சு விட முடியாமல் தமிழகம் முதலான மாநிலங்கள் திணறுகிறது. ஆக்சிஜன் இல்லை, மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை ஆயிரக்கணக்கில் மக்கள் சாகிறார்கள். இப்போது மத்திய அரசு 971 கோடி ரூபாயை 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்திற்குச் செலவிட வேண்டுமா?” என தெரிவித்துள்ளனர்.

Also Read: ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்காக 6 மணி நேரத்தில் ரூ.20 லட்சம் நிதி திரட்டி அசத்திய YouTubers!