Tamilnadu

கோவையில் தடுப்பு பணிகள் தீவிரம்.. தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிப்பால் கொரோனா தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் நேரடியாக சென்று கொரோனா பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி ஆய்வு செய்ய இருக்கிறார்.

இந்நிலையில், கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “கோவையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை மையங்களை ஆய்வு செய்தோம். தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் கோவையில் தொற்று அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.

கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 293 படுக்கைகள் காலியாக உள்ளது. எனவே மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். மேலும், ஒரு சில இடங்களில் தெரியாமல் தனியார் நிறுவனங்கள் நடந்தி வருவதாக புகார் வந்துள்ளது. அங்கு நேரில் சென்று நாளை முதல் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்த உள்ளது.

கோவையில் தளர்வுகளற்ற ஊரடங்கை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராகி உள்ளது. ஆட்டோ மொபைல் நிறுவனம், மில்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தொற்று பரவ காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை தடுக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் சென்னை போல் கோவையிலும் 50 கார் ஆம்புலென்ஸ் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. 67 தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவை எந்த எந்த மருத்துவமனை என்பது குறித்து பொதுக்கள் பார்வைக்கு தெரியும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்.

கடந்த 7 ஆம் தேதி வரை காபந்து அரசு இருந்த வரை தமிழகத்தில் 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பு இருந்தது. ஆனால் இப்போது 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் அதன் ஆக்சிஜன் கூடுதலாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஆக்சிஜன் இருப்பு அன்று 230 மெட்ரிக் டன்- இன்று 650 மெ.டன்: பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!