Tamilnadu
“செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் 8 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலையை கட்டுப்படுத்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தடுப்பூசிக்காக உலகளாவிய டெண்டரையும் தமிழக அரசு கோரியுள்ளது.
இந்நிலையில் மாநிலத்துக்கு தேவையான தடுப்பூசிகள், ஆக்சிஜனை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் உள்ள எச்.எல்.எல். பயோடெக் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிறுவனம் தொடர்பாக தி.மு.க நாடாளுமன்றகுழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து நேற்று முன்தினம் ஒரு கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இருவரும் நிருபர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தில் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து துரித நடவடிக்கைகளயும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருந்த பரிந்துரை கடிதத்தை மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை சந்தித்து கொடுத்துள்ளோம்.
அப்போது உரம் மற்றும் ரசாயனத்துறை இணை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவும் உடனிருந்தார். இதையடுத்து செங்கற்பட்டில் இருக்கும் தடுப்பூசி பூங்காவை அடுத்து ஒரு வாரத்தில் செயல்படுத்துவது குறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது :- செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை தொடர்பாக எங்கள் தரப்பு திட்டத்தை கொடுத்துள்ளோம். அதனை ஆய்வு செய்து விரைந்து உடனடியாக முடிவெடுப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதில் தமிழக முதல்வர் வலியுறுத்தலின்படி செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை செயல்பாட்டுக்கு வந்தால், அடுத்த ஆறு மாத காலத்தில் 2 கோடி தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு உண்டு. மேலும் ஒரு ஆண்டு காலத்தில் 8 கோடி தடுப்பூசி வரை தயாரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இருக்கும் நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனை கேட்ட மத்திய அமைச்சர், உரிய அளவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!