Tamilnadu

“தடுப்பூசி இல்லை என்று ஒருவரைக் கூட திருப்பி அனுப்பக்கூடாது” - அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்!

விழுப்புரம் அருகே கோலியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை விவரம், தடுப்பூசி இருப்பு விவரம், பொது மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகள் இருப்பு குறித்தும் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சை பெற வரும் நபர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்வது, ஆக்சிஜன் அளவு கண்டறிவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, “தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் எவரையும் திருப்பி அனுப்பாமல் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். கோவிஷீல்டு, கோவாக்சின் என விருப்பத்தின் பேரில் தடுப்பூசி கேட்டு வருபவர்களிடம், அதன் தன்மையைப் புரிய வைத்து தடுப்பூசி போட்டு அனுப்ப வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்பக்கூடாது.

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்” என உத்தரவிட்டார்.

Also Read: “மனசாட்சியோடு பேசுங்கள்; கொரோனாவில் அரசியல் செய்ய வேண்டாம்” - அ.தி.மு.கவினருக்கு அமைச்சர் மூர்த்தி பதில்!