Tamilnadu

நலிவடைந்த சிறு, குறு தொழில்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும்: மோடி அரசுக்கு தி.மு.க MP வலியுறுத்தல்!

நலிவடைந்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்காரிக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அவரது அறிக்கை வருமாறு :- “பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிக்கு நம் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. தாங்கள் இந்த தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான பல ஊக்கம் தரும் உதவிகள் செய்து வருவது நல்லது.

நமது பிரதமர் அவர்களின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்கிற தொலைநோக்கு இலக்கை நோக்கி இந்தியா நகர்கிறது. இது 2024க்குள் என்கிற கால அட்டவணைக்குள் அடையும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் சாலைகள் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன.

அனைவரையும் உள்ளடக்கிய தேசிய நிதி வளர்ச்சியை அடைய இந்த துறை மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இது நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பை பெருக்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் புதிய கொள்கைகள், வளர்ச்சிக்கு தேவையான வணிக சூழலை உருவாக்க வேண்டும். அதன் மூலமாக உலக மற்றும் உள்ளூர் சந்தைகளில், சரியான நேரத்தில் சரியான தரத்துடன் சரியான சந்தை விலைக்கு பொருட்கள் தயாரிக்கப்பட்டு சரியான தீர்வுகள் தரும் வகையில் நமது உற்பத்தி தயாராக வேண்டும்.

கடந்த ஆண்டு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தொழில் குறித்த விளக்கத்தை மறு வகைப்படுத்தி உள்ளது. ஒரு வணிக நிறுவனத்தில் ஓராண்டில் நடைபெற்ற மொத்த விற்பனையளவு மற்றும் உபகரணங்களின் முதலீட்டின் அடிப்படையில் தொழிலானது சேவை/உற்பத்தி/வணிகம்/ஏற்றுமதி என மறுவகைப்படுத்தி உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக இதுசார்ந்த எந்தவொரு தகவல்களும் பின்வரும் அம்சங்களில் இல்லை.

ஐ) எத்தனை சேவை/ உற்பத்தி /வணிகம்/ஏற்றுமதி ஆகியவற்றின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஜவுளி, ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்பம், மின்னணு என எவ்வளவு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 65 மில்லியன் (6 கோடி 50 இலட்சம்) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இருப்பதாக அமைச்சகத்தின் வலைதளம் கூறுகிறது. ஆனால், நானறிந்த வரையில் செப்டம்பர் 2015 முதல் ஜூன் 2020 வரை ஈ.எம்.1ன்படி 1.02 கோடி தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈ. எம் 2ன்படி 2007 முதல் 2015 வரை 22 இலட்சம் தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அமைச்சகத்தின் இணையதளத்தில் 30,00,822 தொழில் நிறுவனங்கள் மே 2021 வரை பழைய பதிவு செய்யும்முறை (யூஏஎம்)-க்கு பதிலாக கொண்டு வரப்பட்ட புதிய உத்யம் வலையதள பதிவு தெரிவிக்கிறது. இதன் மூலம் அமைச்சகத்தின் தகவல் மற்றும் தரவுகளில் உள்ள மிகப்பெரிய குறைபாடு தெரிகிறது.

கடந்த 3 ஆண்டுகளின் மொத்த விற்பனையளவு மற்றும் நிறுவனங்கள் தொடங்கிய ஆண்டு மொத்த பணியாளர்கள் (வெள்ளை, நீல, பழுப்பு நிற அடிப்படையிலான தரம்), நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர், உள்ளூர் மற்றும் பிற மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை, விபரங்கள் மற்றும் அவர்களது நிலை திறன் பெற்ற மற்றும் திறனற்ற தொழிலாளர்கள்/நிர்வாக பணியாளர்கள் எண்ணிக்கை) மேற்கூறிய முறைப்படி ஒரு தனி அடையாள எண்ணை ஒவ்வொரு பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கினால், அதன் மூலம் பல தகவல்களை அறிந்து நெறிப்படுத்த முடியும்.

பணியாற்றும் தொழிலாளர்கள், உரிமையாளர்கள்/பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் போன்ற விபரங்கள், பல தரப்பட்ட தொழில்களின் வளர்ச்சி, அவற்றின் நிலை ஆகியவற்றை அறிய முடியும். எனது இந்த முன் மொழிதலுக்கு வலு சேர்க்க குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரை அழைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களது அவசரத் தலையீடு தேவைப்படுகிறது. உங்களது நேர்மறையான நல்லபதிலை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பாஜக தேர்தலில் கொட்டி குவித்த கருப்புப் பணம்; SV.சேகர் வாக்குமூலம்: என்ன செய்யப்போகிறது வருமான வரித்துறை?