Tamilnadu

100 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையம், தடுப்பூசி முகாம்... தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி முகாம்கள் மூலம் கோவிட் தடுப்பூசி தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தற்போது ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், முதல்வர் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின், ராயபுரம் மண்டலத்தில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளியில் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தடுப்பூசி சிறப்பு முகாமினை தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து, பாரதி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில், 40 படுக்கைகள் மகளிருக்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 8 மருத்துவர்கள், 16 செவிலியர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

மேலும், இந்த மையத்தில் உடனுக்குடன் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில் 10 தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்படும் தொற்று பாதித்த நபர்களின் உடல்நிலை குறித்து அவர்களுடைய உதவியாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் மேல் சிகிச்சைக்காக அல்லது அவசர சிகிச்சைக்காக இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிரந்தரமாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறும் நபர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை சார்பில் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தடுப்பூசி செலுத்துவதை இயக்கமாக நடத்தி கொரோனாவை வெல்வோம்” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!