Tamilnadu

PSBB பள்ளி ஆசிரியர் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு - நடவடிக்கை கோரி காவல்துறையில் புகார்!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பற்றி அவதூறு செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார்.

காவல் துறை ஆணையாளருக்கு தி.மு.க தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் அளித்துள்ள புகார் மனுவில், “தற்போது சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அதன் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது.

இது அனைவரும் அறிந்ததே அதன் தொடர்ச்சியாக தற்போது (Face Book) போன்ற சமூக வலைத்தளங்களில் சில விஷமிகள் இந்த விஷயத்தை பற்றியோ அல்லது அதன் மீது காவல் துறை உடனடியாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தது குறித்தோ எந்த சிந்தனையும் இல்லாமல் வேண்டுமென்றே திமுக தலைமையிலான தமிழக அரசின் மீதும் திமு கழகத்தின் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் சில பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக நாராயணன் சேஷாத்திரி என்பவர் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்ற ஆசிரியர் தி.மு.க-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சொந்தக்காரர் என்றும் அதனால் இந்த கேஸை மூடி மறைத்து விடுவாராகள் என்றும் பொதுவெளியில் ஒரு சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கூற்றிற்கு ஒரு விதமான முகாந்திரமும் இல்லாமல் தான் கூறுவது பொய் என்று உணர்ந்தோ அல்லது அதன் உண்மை குறித்து ஆராயாமலோ தன்னுடைய சித்தாந்தத்திற்கு எதிர் கருத்து கொண்டவர் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் பெயரை கெடுக்கும் எண்ணத்தோடு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து மேலும் பலரும் இதனை பதிவிட்டு வருவதால் இந்த அவதூறு பல தரப்பட்டவர்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்பதும் பொய். அதேபோல் அப்படி அவர் உறவினர் என்பதால் தமிழக அரசு இந்த வழக்கை மூடி மறைக்கும் என்பதும் அவர் மீது நடவடிக்கை எடுக்காது என்பதும் கீழ்த்தரமான அவதூறு என்பதோடு அல்லாமல் ஆட்சியின் மீதும் எங்கள் கட்சியின் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டு மற்றும் மக்களிடையே கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்க கையாளப்படும் உத்தி.

எனவே மேற்கூறிய நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதனைப் பின்பற்ற சமூக வலைத்தளங்களில் மீள் பதிவு செய்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பதிவுகளை நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது: PSBB பள்ளிக்கு சம்மன் அனுப்ப முடிவு - போலிஸார் அதிரடி!