Tamilnadu

"தமிழ்நாட்டில் நன்மையின் ஒளியை ஏற்றியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்" - பிரபல மலையாள நாளிதழ் புகழாரம்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், மக்களுக்கான திட்டங்களிலும், எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பணியாற்றி வருவது தமிழகம் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரபல மலையாள நாளிதழான ‘மாத்ருபூமி’யில் ‘ஸ்டாலின் தங்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு’ என்ற தலைப்பில் பிரசாந்த் கானத்தூர் என்ற பத்திரிகையாளர் கடந்த மே 23 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

தமிழ்நாட்டில் ஒரு நன்மையின் ஒளியை ஏற்றியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் பதவியேற்று இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ளன. ஆனால் இக்குறுகிய காலத்திலேயே மக்கள் அவரின் கனிவான முகத்தைக் கண்டுள்ளனர். அன்பின், அக்கறையின் தீண்டலை அனுபவித்துள்ளனர். தமிழக அரசியல் இதுவரை கேட்டறிந்திடாத வகையில் அவரது நிர்வாகம் அமைந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் அன்பால் ஆளுகிறார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் எதிர்க்கட்சிகளுக்கும் உரிய பங்கை ஸ்டாலின் அளித்துள்ளார். மே 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பின்னரான தேநீர் விருந்தில் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டு அளவளாவிய காட்சிகள் தொலைக்காட்சிகளில் அபூர்வக் காட்சிகளாயின.

முதலமைச்சரான பின்பு, அதிரடியாகப் பல துறைகளில் மாற்றங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தாலும் தமிழகத்தின் கொரோனா சூழலை உணர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளரை மட்டும் அவர் மாற்றவில்லை. மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும்போது, பெருந்தொற்றுக் காலத்தில் அவரை மாற்றுவது மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று அவர் உணர்ந்துள்ளார்.

2018-இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் தீவிர காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியது ஸ்டாலினின் அகன்ற மனதைக் காட்டுகிறது. தூத்துக்குடி போராட்டத்தில் பங்கெடுத்த பெரும்பாலோனாரின் மீதிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றதும் பாராட்டத்தக்க செயலாகும்.

கோவிட் பெருந்தொற்று நம்மைச் சுற்றி நூற்றுக்கணக்கானோரைக் காவுவாங்கிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கில் கடன் சுமையும் உள்ளது. மக்கள்மீது மிகுதியாக வரிச்சுமையை ஏற்றாமல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தற்போதைய குறிக்கோள். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் என்கிற நிதியமைச்சர் ஸ்டாலினின் தேர்வுகளில் மிகச்சிறந்த ஒருவராக இருப்பார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஒரு சிறந்த தேர்வாவார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, குடும்ப அட்டைதாரர்களுக்குக் கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் அறிவித்ததோடு, அடுத்த இருநாள்களில் அதில் 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களைப் பாதிக்காத அளவில் ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளார். கோவிட் நிவாரண நிதிக்காகப் பெறப்படும் நன்கொடைகளின் தரவுகளையும் தெளிவாக வெளியிட்டுள்ளார். நன்கொடையாளர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கிறார். கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டது ஸ்டாலினின் மேல் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

இத்தனை கால அனுபவம், திறமையான நிர்வாகம், பொதுமக்களின் மனதைக் கண்டறியும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு, மு.க.ஸ்டாலின் என்ற முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஒரு வேறுபட்ட ஆட்சிப்பாதையை உருவாக்குவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!