Tamilnadu
“PSBB பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” : மத்திய கல்வி அமைச்சருக்கு தயாநிதி மாறன் MP கடிதம்!
சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பால பவன் சி.பி.எஸ்.சி. பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தயாநிதிமாறன் எம்.பி.கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங்குக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் சி.பி.எஸ்.சி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் அந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விஷயம் குறித்து கனத்த இதயத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த பள்ளிக்கு சென்னையில் பல கிளைகள் உள்ளன. தற்போது கே.கே.நகரில் உள்ள இந்த பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தவறாக நடந்ததாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில் அதை மறைக்கவும், சாதாரணமாக்கவும் பள்ளி அளவில் முயற்சிகள் நடந்துவருகின்றன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.சி. பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தது. இந்த வழிகாட்டு முறைகளை அமல்படுத்தவில்லை என்றால் சம்மந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளி இதில் எந்த நடைமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் அமல்படுத்தவல்லை. இந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவ மாணவிகளை தேவை இல்லாமல் தொடுவது, மாணவிகளின் அங்கங்கங்கள் குறித்து வர்ணிப்பது, மாணவிகளை வெட்கப்பட வைப்பது, ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது மேலாடை இல்லாமல் வெறும் துண்டுமட்டும் கட்டிக்கொண்டிருப்பது, மாணவிகளுக்கு ஆபாச படங்களை பகிர்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதேபோல் ஆபாசபடம் வந்ததைப் பார்த்த ஒரு மாணவி பள்ளியின் டீனிடம் புகார் செய்தும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதேபோல் மேலும் இரு மாணவிகள் புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்காமல் தொடர்ந்து அந்த ஆசிரியர் வகுப்புகளை நடத்த பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஆசிரியர் ராஜகோபாலனின் நடத்தை தொடர்பாக பல மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் கேள்வி எழுப்பியபோது அதை பள்ளி நிர்வாகம் மறுத்து வந்துள்ளது. தற்போது மாணவிகளுக்கு ஆசிரியர் கொடுத்த தொந்தரவு குறித்து தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியவுடன் தானாக முன்வந்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இல்லை. எனவே, பள்ளி நிர்வாகத்தின் மீது நேர்மையான வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும். போலீசார் நடத்தி வரும் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என்ற தகவல்கள் வந்துள்ளன. சாதி, கலாச்சார பாகுபாடு என்ற உள்நோக்கத்துடன் உள்ள சில குழுக்கள் பள்ளிக்குள் இருந்துகொண்டு பள்ளியின் அறங்காவலர் பேசும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில், கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளைக் குறைத்துக் காட்டுவதுடன், குற்றச்சாட்டை சேதப்படுத்தி, சாதாரணமாக காட்டி பள்ளிக்கு நற்பெயரை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பள்ளி நிர்வாகத்திடம் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இந்த பள்ளி சி.பி.எஸ்.சி அங்கீகாரத்துடன் செயல்படும் பள்ளி என்பதால் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் குறித்தும், தவறு செய்தவர்கள் குறித்தும் உரிய விசாரணையை மேற்கொண்டும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும் போது சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது குறித்தும், பள்ளி நிர்வாகம் மற்றும் அறங்காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!