Tamilnadu
“வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘பிசினஸ் இந்தியா’ புகழாரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல்கால உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும், மக்கள் பிரச்சினைகளை கூர்ந்து கவனித்து தீர்வுகாண் பதிலும் அக்கறை செலுத்தி வருகிறார் என்று ‘பிசினஸ் இந்தியா’ ஆங்கில இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.
பிசினஸ் இந்தியா மாதமிரு முறை இதழில் ஆர்.பகவான்சிங் எழுதிய Stalin: a moment to seize’ - என்ற கட்டுரையின் முக்கியப் பகுதிகள் வருமாறு :-
தமிழக முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இது யாருக்கும் ஆச்சரியத்தைத் தரவில்லை. ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியபின், மூன்றாவது முறையாக மீண்டும் அ.தி. மு.க.வே ஆட்சிக்கு வரும் என்ற சர்வேக்களை நம்பிய தி.மு.க.வின் முதுகில் குத்துபவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இது ஆச்சரியத்தைத் தரவில்லை.
1969 முதல் 2011 வரை ஐந்து முறை முதலமைச்சராக இருந்த அவரது தந்தையார் - மறைந்த கலைஞருக்குப் பின் 68 வயதில் இவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற உடனேயே பெரும் புரட்சியை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து விடுவார் என்று ஒரு சில தி.மு.க.வினர் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடைபெறவில்லை.
ஆட்சிக்கு வருவதற்காக குறுக்கு வழிகள் எதையும் அவர் மேற்கொள்ளாமல் மக்களின் ஏகோபித்த ஆதரவுக்காக காத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க 191 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதன் கூட்டணியான பா.ஜ.க. 4 தொகுதிகளிலும், பா.ம.க. 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
அதேசமயம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 188 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன்கூட்டணியான காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும் என 159 தொகுதிகள் என மகத்தான வகையில் வெற்றி பெற்றன. 234 தொகுதிகளில் உள்ள தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
“தமிழகம் தி.மு.க.வின் வெற்றியை அறிவித்துள்ளது. இனி தமிழகத்தில் வெற்றி தொடரும்” என்பதே தேர்தல் வெற்றிக்குப்பின் ஸ்டாலினின் கருத்தாக உள்ளது. தொடர்ந்து தனது அரசு முழுக்க முழுக்க வெளிப்படையாக இருக்கும் என்றும், கொரோனா தொற்றுப் பிரச்சினையைத் தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில நிதிச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை 100 நாட்களில் நிறைவேற்றிட ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்றதுறையை ஏற்படுத்தி, அதன் மூலம் பொதுமக்கள் குறைகளை தீர்க்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித் திருந்தார்.
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகாண ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமையில் புதியதுறை அமைக்கப்பட்டு, அது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க அவர் நடவடிக்கை எடுக்கவுள்ளார் என்பது தெரிய வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க.வை வலுப்படுத்த மாநிலத்தில் மூலை முடுக்கெல்லாமும் சாலையோரங்களிலும் மு.க.ஸ்டாலின்பிரச்சாரம் மேற்கொண்டார். முரசொலிமாறன் சென்னை தெற்கில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, ஸ்டாலின் சிறியவராக இருந்த நேரத்திலேயும் கடுமையாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து தன் தலைமையில் குழு அமைத்து கட்சிக்காக செயல்பட்டார்.
அதுவே பின்னாளில் தி.மு.க. இளைஞர் அணியாக மாறியது. அவரது தந்தை கலைஞர் அவர்கள் பேரணி நடத்தும் போதும், கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் போதும், பிரச்சாரத்தின் போதும் அந்த இளைஞர் அணியினர் உதவிகரமாக இருந்தனர். 1976-ல் மிசா சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டது தி.மு.க.வில் ஒரு உயர்ந்த இடத்தில் அவரைக் கொண்டு சென்றது. 1982-ல் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளராக ஆனவர் தொடர்ந்து 40 ஆண்டுகள் அதிலேயே நீடித்தார். பின்னர் முதன் முறையாக 1989-ல் சட்டமன்ற உறுப்பினராக ஆனார். 1996-ல் அப்போதைய மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையின் மேயரானார். அப்போது சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 9 மேம்பாலங்களை கட்டினார். அத்துடன் மாநிலத் தலைநகரில் ‘சிங்காரச் சென்னை’ என்ற பெயரில் அழகுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பிறகு 2006-ல் கலைஞரின் அமைச்சரவையில் மு.க.ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டார். அடுத்த சில ஆண்டுகளில் துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2008-ல் தி.மு.க. பொருளாளராகவும், 2013-ல் தன்னுடைய அரசியல் வாரிசாக ஸ்டாலினை அவரது தந்தை அறிவித்த போதும், இவர் அவசரப்பட்டு அந்தப் பொறுப்பை ஏற்பதில் ஆர்வம் காட்டவில்லை.
2016-ல் கலைஞர் உடல் நிலைகுன்றிய நிலையில்தான் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் கலைஞர் இறந்தவுடன் இவர் முழுமையான கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அறிவாலயத்தில் கலைஞர் அவர்கள் பத்திரிகையாளர்கள் கூட்டங்களைக் கூட்டும் போதெல்லாம் இவர் பல முறை உடன் இருந்திருக்கிறார். அப்போது அவரிடம் எதைக் கேட்டாலும், “தயவு செய்து தலைவரைக் கேளுங்கள்” என் பதுதான்அவரது பதிலாக இருக்கும். கலைஞரை அவர் எப்போதும் “தலைவர்” என்றே அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் கலைஞருடன் இருக்கும்போது இவரது பேச்சு குறைந்த அளவே இருக்கும். எப்போதுமே அவர் கலைஞரிடம் கருத்துகளைத் தெரிந்து கொள்பவராகவே இருப்பார். கலைஞரின் மேடை உரைகளை கூர்ந்து கவனிப்பார். அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் அவர் இருந்தபோது, சிறந்த அதிகாரிகளைத்தனக்கு துணையாக வைத்துக் கொண்டு அவர்களிடமிருக்கும் திறமைகளை வேண்டிய அளவிற்கு எடுத்துக் கொண்டு தனது முடிவுகளை மேற்கொள்வார்.
“மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகக் கடுமையாகப் பணியாற்றுவார். கோப்புகளை விரைந்துமுடிப்பார் . அதிகாரிகளுடன் விவாதித்து விரைந்துமுடிவெடுப்பார். அதுவும் விதிகளுக்கும், பொதுமக்களுக்கு உண்மையாகவும் இருக்கும்வகையில் நடவடிக்கை மேற்கொள்வார் என்று ஸ்டாலினின் கண்காணிப்பில் இருந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்த்தன் ஷெட்டி குறிப்பிடுகிறார்.
அரசுப் பணிகளில் அவரது குடும்பத்தினரோ அல்லது கட்சியினரோ தலையிடுவதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. மாநில அரசின் வளர்ச்சிக்காக மட்டுமே அவர் தன் முடிவுகளை மேற்கொள்வார். தனிப்பட்ட முறையிலோ அல்லது கட்சியின் அழுத்தத்திற்கோ அவர் எப்போதும் உடன்படமாட்டார்.
தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவர் அதேநிலையில் தான் வெளிப்படை யாகவேஎதையும் மேற் கொள்வார் என்றும்ஷெட்டி மேலும் தெரிவிக்கிறார். தேர்தல் காலத்தில் தான் அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றுவதில் அவர் தீவிரமாகவும், வெளிப்படையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். உண்மையில் சொல்லப்போனால் ஏப்ரல்6-ல் தேர்தல் முடிவடைந்த உடனேயே தனக்கு நம்பிக்கையானவர்களையும், நிபுணத்துவம் மிக்கவர்களையும் அழைத்து தமிழகத்தின் கொரோனா பிரச்சினை, நிதிப் பிரச்சினை, ஊழல் தடுப்பு உள்ளிட்டவைகள் குறித்து அவர் விவாதித்து அதற்கேற்ப அதிகாரிகளை நியமிப்பது குறித்து முடிவெடுத்தார். மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஏற்கனவே எடுத்த முடிவுகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வரலானார்.
இ.பி.எஸ் அமைச்சரவையில் இடம் பெற்ற - சசிகலா நடராஜன் தூண்டுதலால் இடம் பெற்ற ஜெயலலிதாவின் அமைச்சர்கள் இருந்ததற்கு மாறாக - மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய முறையில் செயல்படத் தொடங்கினர். ராஜேந்திர பாலாஜி என்ற அ.தி.மு.க அமைச்சர் “புரட்சித் தலைவி எங்கள் அம்மா, மோடி எங்கள் அப்பா” என்றெல்லாம் காமெடித்தனத்துடன் பேசி வந்தார். பெரும்பாலான அ.தி.மு.க அமைச்சர்கள் போயஸ் தோட்டத்தின் வசூல் ஏஜெண்டுகளாக செயல்பட்டனர். ஆனால், மு.க.ஸ்டாலின் நியமித்த அதிகாரிகள் 24 மணி நேரமும் கடுமையாக உழைக்கக் கூடியவர்களாகவும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என்ற மு.க.ஸ்டாலின் உறுதிமொழிக்கேற்ப செயல்படக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
மூன்று முக்கியத் துறைகளானநிதி, சுகாதாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளுக்கு ஆளும் தரப்பிலிருந்து திறமையானவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நிர்வாகத் திறமை வாய்ந்த - பேச்சாளர் - எழுத்தாளர் - புத்தக ஆசிரியர் என பன்முகத்திறன் வாய்ந்த உயர் அதிகாரி வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நிதித்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருச்சி என்.ஐ.டி.யில்பொறியியல் கல்வி பயின்று, அமெரிக்க நியூயார்க் பல்கலைக் கழகத்தில் ஆய்வு - பொறியியல் துறையில்பி.எச்.டி. மற்றும் எம்.ஐ.டி. ஸ்லோன்மேலாண்மை என பல பட்டப் படிப்புகள் மற்றும் முறைப்படி எம்.பி.ஏ. நிதி மேலாண்மை பயின்றவர். பழனிவேல் தியாகராஜன் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பாங்கில் எம்.டி.யாக இருந்து அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இப்போது தமிழக நிதியமைச்சராக இருக்கிறார். தமிழகத்தில் நிதிப்பிரச்சினை குறித்து அவர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு, வழக்கமான நிலையிலிருந்து மாறி நிதிப்பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் முழுமுயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மாநில சுகாதாரத்துறையில் புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். 2006 - 2011 காலகட்டங்களில் அவர் மேய ராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார். மாநகராட்சியின் சுகாதார மையங்கள், ஏழைகளுக்கான பள்ளிகள், கழிவுநீர் சாக்கடைகள் பராமரிப்பு, தெரு விளக்குகள், சாலைப் பராமரிப்பு இவைகளில் திறம்பட செயல்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ‘மா.சு.’ என்று மக்களால் அழைக்கப்பட்ட மா.சுப்பிரமணியன்.
தொழில் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகள் பிரச்சினையின்றி செயல்படுவது மட்டுமின்றி புதிய முதலீட்டாளர்களை அதிகளவில் தமிழகத்திற்கு வரவழைப்பதும் அவரது முக்கிய பொறுப்பாக இருக்கும். இப்போதுள்ள கொரோனா பிரச்சினையில் பல்வேறு தொழிற்சாலைகள் முடங்கியும், அதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டும் இருக் கிறது. இதையும் தங்கம் தென்னரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இருந்த அ.தி.மு.க. அரசு மாநில தொழில் வளர்ச்சியில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. ஸ்டாலின் அடுத்த சில தினங்களில் டெல்லி செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அங்கு பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்களை அவர் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.
கொரோனா தொற்றின் காரணமாக மே 24 வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது முடிவடைந்தவுடன் தமிழகத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்குள் புதுடெல்லியில் அனைத்துத் தலைவர்களையும் சந்தித்துவிட வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு வாழ்த்துகளும், பூங்கொத்துகளும் குவிந்தவண்ணம் இருக்கின்றன. கூடவே உதவி கேட்டு கோரிக்கை மனுக்களும் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த மனுக்களால் அவருக்கு கூடுதல் சுமை ஏற்படக்கூடும். கொரோனா தொற்று அதிகரித்தது, நிதிச் சுமைகூடுவது, என இவைகளைத் தீர்ப்பதற்காக அவசர உதவியை புதுடெல்லியில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்.
பிரதமர் மோடியும், அவரதுஅமைச்சர்களும் மு.க.ஸ்டாலின் அவர்களை நல்ல முறையில் நடத்துவார்கள் என்றும், அவரது கோரிக்கைகளை ஏற்று உதவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு ஒரு மிகப் பெரிய மாநிலம் என்பதோடு, நியாயமான மனிதாபிமான சோகத்தில் அது இருக்கிறது.
புதுச்சேரி முதலமைச்சரும், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி கொரோனா தொற்று நோய் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்குத் தெரியாமல் கொல்லைப் புறமாக 3 பா.ஜ.க.வினரை எம்.எல். ஏ.க்களாக மத்தியஅரசு நியமனம் செய்துள்ளதை அவர் கண்டித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதையடுத்து பா.ஜ.க. குறித்து அதிகம் விமர்சிக்காமல் இருக்கிறார். அதேசமயம் அவருக்குப் பதில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மூலம் பா.ஜ.க.வின் ஜனநாயகமற்ற போக்கைக் கண்டிக்க வைக்கிறார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?