Tamilnadu

“தமிழ்நாடுதான் பாதுகாப்பானது.. எங்கள் மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பே இல்லை” : உ.பி தொழிலாளர்கள் கருத்து!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் பதிவாகும் உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், குஜராத், உத்தரகாண்ட், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் சுகாதார கட்டமைப்பே கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் இந்த பெருந்தொற்று நேரத்தில் தமிழகத்தில் இருப்பதுதான் தங்களுக்குப் பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளனர். அதிலும் பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தர பிரதேச தொழிலாளர்களே இந்த கருத்தை அதிகமாகத் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோராக்பூரை சேர்ந்த பல ஆயிரம் கூலித் தொழிலாளர்கள் சென்னையின் அம்பத்தூர், அண்ணாநகர், ராமவரம் பகுதிகளில் தங்கியுள்ளனர். கொரோனா தொற்று வேகமாகப் பரவரும் நிலையில், தாங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதுதான் பாதுகாப்பானது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் எங்களது வேலைக்கான கச்சாப்பொருட்கள் தட்டுப்பாடு மட்டுமே உள்ளது. ஊருக்குச் செல்ல எந்த அவசியமும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோராக்பூரில் இரண்டு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. இதனால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கொரோனா தொற்றால் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள் என அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

Also Read: “காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்”: ராஜ்நாத் சிங்-கிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!