Tamilnadu

"100 படுக்கைகளுடன் சித்தா, ஆயுர்வேத சிகிச்சை மையம்" - பூவிருந்தவல்லியில் அமைச்சர் சா.மு.நாசர் திறப்பு!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் நிலவிவரும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளின் படுக்கை வசதி தட்டுப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கி வருகிறது. முதலமைச்சரே கொரோனா படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் குறித்து நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்முறையாக 100 படுக்கை வசதிகள் கொண்ட சித்தா மற்றும் ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஆயுர்வேத சிகிச்சை மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்துவைத்தார்.

அதேபோல் நசரத்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவமனையில் 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சர் நாசர் திறந்துவைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார்.

முன்னதாக பூவிருந்தவல்லியில் 21 வார்டுகளுக்கு தேவையான கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் நாசர் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார்.

Also Read: “கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!