Tamilnadu
“கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனையில் கூடுதல் கட்டணம் பெறப்படுவது குறித்த புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "உலக சுகாதார நிறுவனம், தற்போதுள்ள கொரோனா தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராகவும், கட்டுப்படுத்த வேண்டிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவல் தன்மையின் நிலையைக் கருத்தில் கொண்டு, தொற்று நோய்க்கான சிகிச்சைக்குத் தமிழ்நாட்டிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளின் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டியலினை அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எளிதில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழ்நாடு அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும், தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீண்டும் வழங்கும்.
இதற்கென 2021-22 நிதி ஆண்டில் 1030.77 கோடி ரூபாய் நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பேரிடர் காலத்தில் பொதுமக்களின் கொரோனா தொற்று உறுதிப்படுத்தும் (RT-PCR Test) பரிசோதனை செலவுகளை, பொதுமக்களின் நலனுக்காகக் குறைக்க வேண்டும் என்று சீரிய நோக்கத்துடன், ஏற்கனவே நிர்ணயம் செய்த தொகை அரசால் பரிசீலனை செய்யப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது.
1. கொரோனா தொற்று உறுதிப்படுத்தும் RT-PCR பரிசோதனை அரசு, அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் ரூ.800- லிருந்து ரூ.550 ஆகவும், குழு மாதிரிகளுக்கு (Pooled Samples) ரூ.600 லிருந்து ரூ.400 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாதவர்கள் தனியார் ஆய்வுக் கூடங்களில் RT-PCR பரிசோதனை செய்வதற்கு கட்டணம் ரூ.1,200 லிருந்து ரூ.900 - ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் வீட்டிற்குச் சென்று பரிசோதனை செய்வதற்கு கூடுதலாக ரூ.300ம் கட்டணம் (மாற்றமின்றி) நிர்ணயம் செய்யப்படுகிறது.
தனியார் ஆய்வகங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் பெறுவது குறித்து பொதுமக்கள், 1800 425 3993 / 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இப்புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழ்நாடு அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?