Tamilnadu

“மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிடலாம்... எப்படி செலுத்துவது?” : மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. மின் மீட்டரில் தற்போதைய அளவை புகைப்படமாக எடுத்து தங்களது பகுதியின் மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முதலாம் அலையின்போது தமிழகத்தில் அ.தி.மு.க அரசு அதிகமாக மின்கட்டணம் வசூலித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு செய்து செலுத்தலாம் என தமிழக அரசின் மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு கணக்கீடு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வாட்ஸ் அப் வழியாக போட்டோ அனுப்புவோர் தங்களுக்கான மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும். மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தால் மின்சார வாரிய உதவி பொறியாளரும், உதவி கருவூல அலுவலரும் அதை நீக்க வேண்டும்.

பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அவசியம் எழுந்தாலோ, மீண்டும் ஒருமுறை மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கொரோனாவால் பலியான போலிஸார் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு”- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!