Tamilnadu

12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து புதிதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், கொரோனா தொற்று குறைந்தவுடன் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படம் என அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் மாணவர்கள் எதிர்காலம் கருதி கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வு நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ் அப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும். அந்தக் குழுவில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தவிர வேறு எந்த தகவலும் பதிவிடவோ, பரிமாறவோ கூடாது. அந்தக் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் விடைத்தாளில் தங்களது பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் முதலியவை கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும். ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “ஒரு பயணி என்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும்” - நெறிமுறைகளை வெளியிட்ட போக்குவரத்துத்துறை!