Tamilnadu
“NEP2020 எனும் குலக்கல்வியை என்றைக்கும் தமிழகம் ஏற்காது; அதனைக் கைவிடுக” - கி.வீரமணி வேண்டுகோள்!
மத்திய பா.ஜ.க. அரசு திணிக்க விரும்பும் புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2019 என்பது குலக் கல்வித் திட்டமே - இந்தி, சமஸ்கிருதத் திணிப்பே - கார்ப்பரேட்டுகளின் நலனுக்கே என்பதால், தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு அரசும் எந்த நிலையிலும் ஏற்கப் போவதில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
“ ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெருமையை குலைக்கும் வகையிலும், மீண்டும் புதுவகை மனுதர்மம் - குலதர்மம் கல்வித் துறையில் தனது கொடுங்கரங்களை நீட்டவுமான முயற்சியே புதிய கல்விக் கொள்கை என்னும் மத்திய கல்விக் கொள்கையாகும். இதற்குத் தமிழ்நாடு தொடக்கம் முதலே தனது எதிர்ப்பைப் பதிவு செய்தே வந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் உள்பட வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தி உள்ளனர். மக்களாட்சி என்பதன் தனித்துவம் மாநில உரிமைகளின் பாதுகாப்பு, முன்னே வேகமாகச் செல்லும் மாநிலத்தை பல ஆண்டுகள் பின்னே இழுப்பது போன்றவைதான் இப்புதிய கல்விக் கொள்கை.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. - அதன் அரசியல் வழிகாட்டியும், ஆணையருமான ஆர்.எஸ்.எஸ். வகுத்துத் தந்த கல்வித் திட்டம்தான் இது என்பதை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் உள்பட வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தி உள்ளனர்!
இதனை தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஒன்றைத் தவிர, மற்ற அத்துணைக் கட்சிகளும், பெரும்பாலான கூர்த்த மதி படைத்த கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர் - கடந்த ஓராண்டுக்கு மேலாக.
அரசமைப்புச் சட்டப்படி ‘கல்வி’ என்பது மத்திய அரசின்கீழ் மட்டுமே உள்ள அதிகாரம் அல்ல.; ஒத்திசைவுப் பட்டியல் என்பதில் உள்ள அதிகாரம் ஆனதால், மத்திய அரசுக்கு உள்ள உரிமை அளவு மாநிலங்களுக்கும் உண்டு. மேலும் இந்தியா ஒரு கூட்டாட்சி என்பதாலும், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் என்ற பன்முகத் தன்மை கொண்ட பரந்த நாட்டில், அவரவர் அவர்தம் மொழி, பண்பாடு, கலை, நாகரிகம் இவற்றைப் பாதுகாக்க - பரப்ப - இளம்தலைமுறைகளை ஆயத்தப்படுத்த - அந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க கல்வி என்பது மிக முக்கியமானது ஆகும்!
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தெளிவான விளக்கம்!
இதனை ஏதோ ஒற்றை ஆட்சியாகவே கருதிக்கொண்டு, வகுக்கப்பட்டுத் திணிக்கப்படும் இக்கல்வித் திட்டத்திற்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு ஏன் என்பதை நேற்று (17.5.2021) கூட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.
அதற்குமுன் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களும், புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை எங்களால் ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பொதுநலவாதிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
1. குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாகப் புகுத்துதல்
2. கடந்த 54 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்துவரும் அறிஞர் அண்ணா பிரகடனப்படுத்திய இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைத்து, மும்மொழிக் கொள்கைத் திணிப்பு.
3. 22 மொழிகளை அரசமைப்புச் சட்டம் ஏற்றிருக்கும் நிலையில், மக்களிடம் ஒரு சதவிகிதம்கூட புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கே முக்கியத்துவம்; திணிப்பு.
4. கல்வியை அனைவருக்கும் கற்றுத் தருவதற்குப் பதிலாக, 5 ஆவது வகுப்பு, 8 ஆவது வகுப்பு நுழைவுத் தேர்வு - அதன் பின்னரும் கல்லூரிப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்ற வடிகட்டும் பன்னாடை முறை திணிப்பு.
5. இட ஒதுக்கீடு என்ற சமூகநீதியை அறவே பறித்து, ஒப்புக்கு ஏதோ கூறி சமூகநீதியைத் தகர்த்தல்.
6. இலவசக் கல்வி, ஏழை, எளிய மற்றும் மக்களுக்கு இனி எட்டாக் கனி - கார்ப்பரேட்டுகளுக்குக் கதவு திறக்கும் கல்வி முறை என்று இத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதால், அத்துணை பொதுநலவாதிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்து, கடந்த 7 ஆம் தேதி, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, அமைச்சர்கள் பல துறைகளுக்குப் பொறுப்பேற்று, கரோனா கொடுந்தொற்றிலும் முதல்வர் தொடங்கி அனைவரும் ‘பம்பரமாக’ சுழன்று செயல்பட்டு வருகின்றனர் - கடும் சோதனைகளுக்கிடையில்!
தமிழ்நாடு பங்கேற்காமல், நிராகரித்து தவிர்த்துள்ளது!
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் புதிய கல்வித் திட்டம்பற்றி விவாதிக்கும் கூட்டத்தினை மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களை அழைத்து நடத்துவதும்தானே அரசமைப்புச் சட்டப்படியும், ஜனநாயக முறைப்படியும் சரியானது. (5 மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்து புதிய அரசுகள் வந்துள்ள நிலையில்) ஏதோ குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதுபோல, வெறும் மாநில, பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களை மட்டுமே அழைத்து (அய்.ஏ.எஸ். அதிகாரிகள்) கூட்டம் அறிவித்தபோது, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மாநிலக் கல்வி அமைச்சர்களை அழைத்து விவாதிப்பதே சரி என்ற கோரிக்கையை சில நாள்களுக்குமுன் வைத்ததை, மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர் கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல், தானடித்த மூப்பாகவே அந்தக் கூட்டத்தை - தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்காமல் கூட்டம் நடத்தியதால், தமிழ்நாடு அக்கூட்டத்தில் பங்கேற்காமல், நிராகரித்து தவிர்த்துள்ளது!
இதுபற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செய்தியாளர்களிடையே காரண காரியங்களையும் நன்கு விளக்கியுள்ளார்!
கொள்கைபூர்வமாகவே அறிவித்திருக்கிறார்கள்
தி.மு.க.வைப் பொறுத்தவரை - மத்திய அரசுடன் எப்படி உறவு (கூட்டாட்சி என்பதால்) இருக்கும் என்பதை அறிஞர் அண்ணா, கலைஞர் ஆட்சியில் விளக்கமாக - கொள்கைபூர்வமாகவே அறிவித்திருக்கிறார்கள். ‘‘உறவுக்குக் கைகொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம்!’’ என்பதாகும்.
பிரச்சினைக்குரிய புதிய கல்விக் கொள்கையை எதிர்த்த நிலைப்பாட்டுடன் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்துள்ள நிலையில், அந்த அரசின் நிலைப்பாட்டை மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிய, சரியான வழி - தமிழ்நாட்டு கல்வித் துறை அமைச்சரை அழைத்து அறிவதுதானே நியாயம்? முறையானது?
‘ஒத்துழைப்பு நல்கும் கூட்டாட்சி’
பா.ஜ.க.வே ஒரு புதிய ‘சொற்றொடரை’ ‘‘Cooperative Federalism’ ’ - ‘ஒத்துழைப்பு நல்கும் கூட்டாட்சி’ என்ற சொற்றொடரை கையாளுகின்றனரே, அதன்படி மாறுபட்ட கருத்து ஏன் - அதற்கான காரண காரியங்கள் என்னவென்று ஆராய வாய்ப்பு பெற, அமைச்சர்கள்தானே தெளிவுபடுத்த முடியும்?
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் முழு சுதந்திரம் பெற்றவர்கள் அல்ல; கொள்கை வகுப்பாளர்கள் அல்ல. எனவே, தமிழகத்தின் கரோனாவோடு போராடும் நிலையில், இப்படி மாநில உரிமைகளையும் பாதுகாப்பதும், தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தந்த ஆணையை (விணீஸீபீணீtமீ) செயல்படுத்தும் வகையில், கடமையாற்றி வரும்போது, தமிழ்நாட்டு கல்விக் கண் குத்தப்படாமல் பாதுகாக்க எடுத்த எடுப்பிலேயே கவனமாக இருப்பது என்பது முக்கியம் என்பதை எடுத்துக்காட்டியுள்ள முதல்வர், அமைச்சர் பெருமக்களை நம் மக்கள் - கல்வியாளர்கள் பாராட்டுவர்!
கல்வித் துறையில் இயக்குநர் பதவியை ரத்து செய்யக்கூடாது!
மற்றொரு முக்கிய பிரச்சினை முதல்வர் அவர்களும், அரசும் மறுபரிசீலனை செய்யவேண்டும். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களின் பதவிகளை ரத்து செய்து, அனைத்தும் ஒருங்கே ஆணையர் என்ற அய்.ஏ.எஸ். அதிகாரியின் மூலம் என்று ஆக்குவது அதிகாரப் பரவலைத் தலைகீழாக்கி, ஒரே ஒருவரிடம் குவிப்பது, கல்வி வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்!
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரே துறையில் இருப்பவர்கள் அல்லர் - மாற்றப்படுபவர்கள். கல்வித் துறையில் ஆழ்ந்த அறிவும், அனுபவமும் பெற்றவர்களாலேயே சாதனை செய்ய முடியும். கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் காமராசர் ஆட்சிக் காலத்தில் செய்த கல்விப் புரட்சிதான் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளம். எனவே, இந்தப் புதிய மாற்றத்தை ரத்து செய்தோ, மாற்றியோ பழையபடி இயக்குநர்கள், கல்வி அறிஞர்களால் நிர்வகிக்கப்படுவதே சிறந்த வளர்ச்சியைப் பெருக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.
மறு ஆய்வு செய்து, இயக்குநர்களை மீண்டும் கொண்டு வருவது அவசியம்!
இதே தத்துவம் பல ஆட்சித் துறைகளிலும் பரவலானால் - ஆளுமை சிறந்தோங்கும் என்பது உறுதி! மாண்பமை முதல்வர் இதுபற்றி காலந்தாழ்த்தாமல் விரைந்து மறு ஆய்வு செய்து, இயக்குநர்களை மீண்டும் கொண்டு வருவது அவசியம் ஆகும்.”
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!