Tamilnadu

“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!

கொரோனா பாதித்த பெற்றோரின் தொற்றால் பாதிக்கப்படாத குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

இம்மையத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் முதல்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆக்சிஜன் தேவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு தற்போது ஆலை இயங்கத் தொடங்கியுள்ளது.

ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு உரிய வெப்பநிலையை அடைய வேண்டும். எனவே வெப்ப நிலையை உயர்த்த வேண்டிய பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்.

கொரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் தொற்று பாதிக்கப்படாத குழந்தகளை இந்த மையத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஒடிசா மாநிலம் ரூர்கேலா செயில் இரும்பு உருக்கு ஆலையிலிருந்து 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ரயில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில்நிலையம் வந்தடைந்தது.

இந்த திரவ ஆக்சிஜன் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக மீன்வளம் - மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: “இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் புதிய கல்விக் கொள்கை” - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாடல்!