Tamilnadu
‘டவ் தே’ எதிரொலி: வெளுத்து வாங்கிய மழை; இன்றும் நாளையும் குமரி உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நேற்று முன்தினம் மாலையில் வலுபெற்றது. நேற்று அது மேலும் வலுவடைந்து காற்றழுத்ததாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும், அதனை தொடர்ந்து 12 மணிநேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும்.
இதன் காரணமாக நேற்று அதிகபட்சமாக கன்னியாகுமரி பகுதியில் குழித்துறை 11, பேச்சிப்பாறை 9, தக்கலை 8, பெருஞ்சாணி அணை 6 செ.மீ என மழை பெய்தது. அரவக்குறிச்சி 7, முதுகளத்தூர், ஓசூர், கரூர், பரமத்தி, கூடலூர் பஜார்(நீலகிரி), தண்ட ராம்பேட்டை (திருவண்ணாமலை), தணியாமங்கலம் (மதுரை) ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும் பெய்தது. நேற்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், சூறைக் காற்றுடன் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்தது.
அதேபோல் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (17ம் தேதி) நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைபெய்யக் கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி, குறைந்த பட்சவெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் கோவைக்கு அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பெய்யும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல் குமரி மாவட்டத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மரம் சரிந்து விழுந்தாலோ மழை தொடர்பான இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலோ உடனடியாக மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை பகுதியில் தொடர் மழையால் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதனை உடனடியாக மின்துறையினர் விரைந்து சென்று சீரமைத்தனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்றைய தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடலோர காவல் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். நெல்லையில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்தாலும் தொடர்ந்து வானம் மேகமூட்டமாக உள்ளது.
லட்சத்தீவுக்கு அருகே அரபிக்கடலில் மிகத்தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகி உள்ளது. இது தற்போது புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், கொல்லம், பத்தனம்திட்டா உட்பட 7 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கேரளா தயாராக இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!