Tamilnadu
“உள்ளே நுழையவிடாமல் தடுக்கப்பட்டவரே இன்று சட்டப்பேரவைக்குத் தலைவர்” - கொண்டாடும் தமிழக மக்கள்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள், கடந்த மே 7-ம் தேதி பதவியேற்றனர்.
இன்று நடந்த முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தி.மு.க சார்பில் சட்டப்பேரவைத் தலைவராக அப்பாவு மற்றும் சட்டப்பேரவை துணை தலைவராக பிச்சாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு, பெரும் போராட்டங்களைக் கடந்து சட்டப்பேரவைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார்.
2016ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அப்பாவு, அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தபால் வாக்குகளையும், மூன்று சுற்று இ.வி.எம் வாக்குகளையும் மீண்டும் எண்ணியபிறகே முடிவை அறிவிக்க வேண்டும் என அப்பாவு கோரிக்கை விடுத்த நிலையில், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றப் படியேறினார் அப்பாவு. வழக்கு நான்கு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு , பின்னர் நீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் வாக்குககள் எண்ணப்பட்ட நிலையில், முடிவுகளை அறிவிக்கக்கூடாது என எதிர் தரப்பு தடை கோரியதால் முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அதற்குள் ஐந்தாண்டு கடந்து, அ.தி.மு.க ஆட்சியும் முடிந்துவிட்ட நிலையில், 2021 தேர்தலில் அப்பாவு அதே ராதாபுரம் தொகுதியில் அதே இன்பதுரையை எதிர்த்துப் போட்டியிட்டார். இம்முறை சந்தேகத்திற்கிடமற்ற வகையில் மகத்தான வெற்றியைப் பெற்றார் அப்பாவு.
இதையடுத்து தற்போது சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அப்பாவு. எந்த சட்டசபையில் அப்பாவுவை நுழையவிடாமல் நீதிமன்றமும், ஆண்ட அரசும் தடுத்ததோ அந்தச் சட்டப்பேரவையின் தலைவராகி இருக்கிறார் அப்பாவு.
தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அளித்துள்ள இந்தப் பொறுப்பு, அப்பாவுவின் தொடர் போராட்ட குணத்திற்குக் கிடைத்த மரியாதை என அரசியல் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!