Tamilnadu

கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்... சிறப்பாகச் செயல்பட்ட போக்குவரத்துத் துறை!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு இன்று காலை முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சொந்த ஊர் திரும்பும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் 08.05.2021 காலை 11.30 மணி முதல் 10.05.2021 காலை 8.00 மணி வரை கூடுதல் தலைமைச் செயலாளர் போக்குவரத்து ஆணையர் தென்காசி சு.ஜவஹர் ஐ.ஏ.எஸ் தலைமையில் மாநிலத்தின் முக்கிய சாலைகளில் பல்வேறு குழுக்களாக இணைப் போக்குவரத்து ஆணையர்கள், துணை போக்குவரத்து ஆணையர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் இந்த பேரிடர் காலத்தில் சேவை மனப்பான்மையோடு செயல்படாமல் பொதுமக்களை வருத்தும் வகையில் அதிக கட்டணம் வசூலித்த வாகனங்களின் மீது அனுமதி சீட்டு நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

விதிமீறலில் ஈடுபட்ட பேருந்துகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம்:

• 304 ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

• இதன் மூலம் அபராதமாக ரூபாய்.10,92,600 வசூலிக்கப்ட்டது.

• அபராத வரியாக ரூபாய். ரூ.27,20,290 வசூலிக்கப்பட்டது.

• 25 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன.

ஆக மொத்தம் அபராதக் கட்டணம் மற்றும் அபராத வரியாக அரசுக்கு மொத்தமாக ரூ.38,12,890 வசூல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: "தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை”- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!