Tamilnadu
“தமிழ்நாடு பெரியார் மண்; சமூகநீதி மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது” : திருமாவளவன் எம்.பி பேச்சு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி அமைகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தி.மு.க போட்டியிட்ட 174 வேட்பாளர்களில் 127 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ம.தி.மு.க 4, வி.சி.க, 4, சி.பி.எம் 2, சி.பி.ஐ, 2, கொ.ம.தே.க. 1 என்ற சீட் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலம், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தொலைபேசி, டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் வருகின்றனர்.
அதன்படி தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, முதல்வராக பதவியேற்க உள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் எம்.பி, “இந்த சட்டமன்ற தேர்தலில் அசாம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளது. அவர்களின் மதவாத அரசியல், சாதி முயற்சிகள் இந்த 3 மாநிலங்களிலும் எடுபடவில்லை. 200ற்கும் மேற்பட்ட இடங்களில் மம்தா இமாலய வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க படு தோல்வியை அடைந்துள்ளது. மூன்றாவது முறையாக மம்தா ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பா.ம.க, அ.தி.மு.க முதுகில் ஏறி சவாரி செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைத்த பா.ஜ.க படுதோல்வியை சந்தித்து உள்ளார்கள். பா.ஜ.க அவர்களது கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள். தமிழ்நாடு பெரியார் மண் சமூகநீதி மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது
4 தொகுதியில் வி.சி.க வெற்றி பெற்றுள்ளோம் . இது விசிகவிற்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த ஒரு மகத்தான வெற்றி,தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வியூகம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
கடந்த காலத்தில் நடந்த ஊழல் ஆட்சி போல் இல்லாமல் நல் ஆட்சியை அமைக்கும் வல்லமை மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. கொரானா நிவாரணமாக 4000 ரூபாய் அளிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கு அவர் கையெழுதிடுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, அது பாஜக விற்கு கிடைத்த வெற்றி அல்ல அதிமுக விற்கு கிடைத்த வெற்றி. அவர்கள் தமிழக அரசியலில் எந்த வித தாக்கமும் ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்