Tamilnadu
“ஓய்வுக்குப் பின் பதவியை பரிசளிக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
தேர்தல் ஆணையம் போன்றவை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். - மே.வங்கத்தில் எட்டுக் கட்ட தேர்தல் என்பது அரசியல் நோக்கம் கொண்டதே. சட்டமும், ஆணையும் மக்களுக்காகத்தானே தவிர, சட்டங்களுக்காகவும், விதிகளுக்காகவும் மக்கள் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் தேர்தல் ஆணையம் என்பதன் நடுநிலைமையும், சுதந்திரமும் பெரும்பாலான மக்களின் அவநம்பிக்கையைப் பெற்று வருவது, அதன் மதிப்பு மரியாதையை பெரும் அளவுக்குத் தாழ்த்திவிட்டது.
ஓய்வுக்குப்பின் பதவி முறை ஒழிக்கப்பட வேண்டும்!
மத்தியில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு ஓய்வு பெற்றபின் ‘பரிச’ளிக்கும் பதவிப் பொறுப்புகளாகவே தேர்தல் ஆணைய உறுப்பினர்கள், பல முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் நடைமுறையே மாற்றப்படல் வேண்டும். முழு சுதந்திரமாக இயங்கவேண்டிய ஒரு அமைப்பு பற்பல நேரங்களில் ஒரு ‘பொய்க்கால் குதிரையாகவே’ இயங்குவது வேதனைக்குரியது; மட்டுமல்ல - ஜனநாயகத்தின் மாண்பைக் கேள்விக்குறியாக்குவதுமாகும்.
‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்‘ என்பது பழமொழி, யாருக்குப் பொருந்தினாலும் பொருந்தாவிட்டாலும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கே முழுமையாகப் பொருந்த வேண்டும். ஆனால், நடைமுறையில் நாளும் மிகப்பெரிய சந்தேகங்களுக்கு ஆளாக்கப்படுகின்றது!
சட்டமன்றத்தில் 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்கத்தின் தேர்தலை ஓரிரு நாட்களில் நடத்தி முடிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் 8 கட்டங்களாக பிரித்து, மே ஒன்றாம் தேதி வரை இழுத்து இழுத்து நடத்த அறிவித்திருப்பது பற்றி வெளிப்படையான கடும் விமர்சனங்கள் அதன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை!
மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தல் ஏன்?
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து எப்படியாவது மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை வெற்றி பெறச் செய்ய சாம, பேத, தான, தண்ட முயற்சிகளில் ஈடுபடவும், அதற்கேற்ப பிரச்சார வியூகம் வகுக்கவுமே இந்த 8 கட்ட ஏற்பாடு என்ற குற்றச்சாற்று பரவலாகக் கூறப்பட்டே வருகிறது! அதற்காக மற்ற தேர்தல் பல வாரங்களுக்கு முன்பே முடிந்த மாநிலங்களான அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி முடிவுகள் வாக்கு எண்ணப்படாமல் காத்துக் கிடக்கும் - வெறுமை ஆட்சி புரியும் வேதனையான நிலை!
வாக்கு எண்ணிக்கை மய்யத்திற்கு முன்பே பலவித ஐயங்கள் வரும் வகையில், கார்கள் வந்தன. ‘டிரோன் பறந்தது’ - ‘மாணவர்கள் சென்றார்கள்’, ‘டிரங்க் பெட்டிகள் சென்றன’, ‘கண்ட்டெய்னர் லாரி நின்றது’ என்ற குற்றச்சாட்டுகள் நாளும் வந்த வண்ணம் இருப்பது, தேர்தல் ஆணையத்துக்குப் பெரும் தலைவலி, திருகுவலி அல்லவா? அசாமில் பா.ஜ.க. காரில் வாக்குப் பெட்டிகள் பயணிக்கின்ற பரிதாபம். மக்களின் சந்தேகம் வலுக்கும் வண்ணம் சூழல் வரலாமா?
மேற்கு வங்க முதல்வரின் நியாயமான கோரிக்கை!
இந்நிலையில் கொரோனா கொடுந்தொற்றால் இரண்டாம் அலையின் வீச்சு அதிவேகமாகப் பரவும் நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா ‘பர்னர்ஜி’ அவர்கள் ‘‘எஞ்சிய மூன்று கட்டத் தேர்தலை ஒரே நாளில் நடத்தி மக்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’’ என்று கேட்பது நியாயம் அல்லவா?
பிரச்சாரத்திற்குப் போன தலைவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. (இரண்டு தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் தலைமை அமைப்பில் உள்ளவர்களுக்கும் டெல்லியில் தொற்று பற்றிக் கொண்ட பரிதாபம் ஏற்பட்டுள்ளது) இப்போதும் முடியாது, பழைய ஏற்பாடே நீடிக்கும் என்பது வீண் பிடிவாதம், வறட்டுக் கவுரவம் என்ற ‘முதலைத்தனம்‘ அல்லாமல் வேறு என்ன?
மூன்று கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்தி முடித்து, வாக்கு எண்ணிக்கை நாளையும் முன்கூட்டியே அறிவித்து நடத்தினால் தேவையற்ற பணச் செலவுகூட - அரசு கஜானாவுக்கு மிச்சமாகும். நீளும் ஒவ்வொரு நாளும் மக்கள் வரிப்பணம் தானே கூடுதலாகச் செலவிடப்பட வேண்டும் பாதுகாப்புப் பணிக்கான வகையில்?
மக்களுக்காகத்தான் சட்டமும் - விதிகளும்!
ஏற்கெனவே அங்கே தலைமைச் செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். போன்ற மூத்த நிர்வாகிகள் அறிவுரைகளையெல்லாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்? நீதி என்பது வழங்கப்படும்போது அதன் முறையும், தோற்றமும்கூட முக்கியமாக சரியான நீதி வழங்கப்பட்ட தோற்றமும் முக்கியம் என்ற சட்டக் கருத்தை (Not only Justice to be done, but also Justice Appears to be done) என்பதை மறக்கலாமா?
ஜனநாயகம் காக்கும் வேலிக்குப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கொரோனா காலத்து மக்கள் உயிரையும் பாதுகாக்க உதவுங்கள் - மக்களுக்காகத்தான் சட்டமும், விதிகளுமே தவிர விதிகளுக்காக, மக்கள் இல்லை; தலைக்குத்தான் குல்லாவே தவிர, குல்லாய்க்கு அல்ல தலை - மறவாதீர்! செயல்படுங்கள்!!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?