Tamilnadu

"பயத்தில் கடைக்குள் ஓடிய குழந்தைகள்.. காப்பாற்றப் போன தாத்தா” - வெடி விபத்தில் மூவர் பலியானது எப்படி?

வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டாசுக்கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர்.

மோகன் தனது மகள் திவ்யா பெயரில் லைசென்ஸ் அனுமதி பெற்று லத்தேரி பேருந்து நிலையத்தில் 1992-லிருந்து பட்டாசு கடை நடத்திவருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறந்து வைத்திருந்த அவருடன் பேரக்குழந்தைகள் தனுஷ் (8), தேஜஸ் (6) ஆகியோரும் இருந்தனர்.

இன்று பகல் 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் பட்டாசுகளை வாங்கியுள்ளனர். கடையில் இருந்த புதிய ரக வெடிகளைப் பார்த்து, ‘இது எப்படி வெடிக்கும்?” என்று சில வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.

பேரக்குழந்தைகளை கடைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு புதிய ரக பட்டாசுகளில் மூன்றினை கடைக்கு வெளியில் வைத்து வெடித்துக் காட்டியுள்ளார் மோகன். அப்போது, பறந்துசென்ற தீப்பொறி கடைக்குள் விழுந்துள்ளது. உடனே கடையிலிருந்த அத்தனை பட்டாசுகளும் வெடிக்க ஆரம்பித்துள்ளன. கடைக்குள் இருந்த குழந்தைகள் இருவரும் பயத்தில், வெளியே ஓடாமல், பட்டாசுகள் அதிகமாக இருந்த அறைக்குள் ஓடியுள்ளனர்.

தீ பரவியதால் பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன. பேரக்குழந்தைகளை காப்பாற்றுவதற்காக கடைக்குள் ஓடிய மோகனும், பட்டாசுகள் மொத்தமாக வெடித்து சிதறியதில் உள்ளேயே சிக்கிக்கொண்டார். இந்த வெடி விபத்தில் உடல் கருகி மூவரும் உயிரிழந்தனர்.

தீயணைப்பு நிலைங்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு அப்பகுதி மக்களே மீட்புப் பணியில் ஈடுபட்டனர். டிராக்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து ஊற்றியும், மண்ணை அள்ளி வீசியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள்ளாக பட்டாசுக்கடை முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டது.

வெடி விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் மோகனின் சடலங்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்.பி செல்வகுமார் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Also Read: “இந்தியாவில் சுகாதார அவசரநிலை.. என் ஆலோசனைகளைக் கேளுங்கள்” - மோடி அரசை எச்சரித்து மன்மோகன் சிங் கடிதம்!