Tamilnadu
“நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த்து அவரது குடும்பத்தார் அவரை வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் மாரடைப்பு ஏற்பட்டதால், ரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சையும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சை அளிக்கப்பபட்டது. 24 மணி நேரம் கடந்த பிறகு தான் அவரது உடல்நிலை குறித்து கூற முடியும் என்று மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பத்மஸ்ரீ, கலைவாணர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற நடிகர் விவேக் உயிரிழந்தது திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விவேக்கிற்கு திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்.
தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?