Tamilnadu

“நடுக்கடலில் மீனவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் பலி” : மீன்பிடித்தபோது நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மற்றும் வானகிரி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலையில் சின்னங்குடி அருகே கடலுக்கு சென்று மூன்று கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துள்ளனர்.

அப்போது, புதுப்பேட்டை மீனவர்கள் மீன்பிடிக்க வீசிய வலையின் மேல் வானகிரி மீனவர்கள் படகு உரசியுள்ளது. இதனால் தங்களது வலை சேதமடையும் என புதுப்பேட்டை மீனவர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து இரு கிராம மீனவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வானகிரி மீனவர்கள் புதுப்பேட்டை மீனவர்களை தாக்கியதில் படுகாயமடைந்த புதுப்பேட்டை கிராம மீனவர் மூர்த்தி மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டுசென்று, பின்னர் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தரங்கம்பாடி கடலோர காவல்படை காவல்நிலையத்தில் புதுப்பேட்டை மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து பூம்புகார் காவல் நிலையத்தில் வழக்கை ஒப்படைத்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலிஸார் வானகிரியைச் சேர்ந்த சதீஷ், ஏழுமலை, செல்லதுரை, ராஜீவ்காந்தி மற்றும் சிறுவர்கள் நிதிஷ், நிதின் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து சதீஷ், ஏழுமலை, செல்லதுரை, ராஜீவ்காந்தி ஆகியோரை பொறையார் சிறையில் அடைத்தனர்.

சிறுவர்கள் நிதின், நிதிஷ் ஆகியோரை நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியில் அடைக்கப்பட உள்ளனார். மீனவர்களிடையே நடுக்கடலில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அலட்சியத்தின் உச்சம்..கடந்த 15 நாளில் 51 அரசு ஆசிரியர்கள் கொரோனாவால் பலி”: பா.ஜ.க ஆளும் ம.பி-யில் அவலம்!