Tamilnadu
“சுபதினத்தில் பத்திரப் பதிவு செய்தால் சொத்துப் பெருகுமாம்” - அரசே மூடநம்பிக்கைக்கு துணைபோவதா?
சுப தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்கவும், அன்றைய நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் பத்திரங்களை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத்துறை தலைவருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசே மூடநம்பிக்கைக்கு ஆதரவாகச் செயல்படுவதா என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சுபதினத்தில் பத்திரப்பதிவு செய்தால் சொத்துப் பெருகும் என்ற தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவுத் துறையின் செயல்பாட்டைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
"நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-A என்ற பிரிவு ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமைகளை (Fundamental Duties) வலியுறுத்தும் பிரிவு.
அதில் உள்ள (h) என்ற உட்பிரிவு
(1) அறிவியல் மனப்பாங்கு (Scientific temper)
(2) கேள்வி கேட்கும் உணர்வு (Sprit of Inquiry)
(3) மனிதநேயம் (Humanism)
(4) சீர்திருத்த மனப்பான்மை (Reform)
ஆகிய ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குடிமகனும் வளர்த்துக் கொள்ளுதல் இன்றியமையாத முக்கிய கடமையாகும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது!
பத்திரப் பதிவுத் துறையில் - இதை செயல்படுத்துவதுதான் மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசின் முக்கிய கடமையாகும்.
ஆனால், இப்போதுள்ள தமிழ்நாடு அரசு எப்படியோ அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு, முற்றிலும் அவரது பகுத்தறிவுக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளதுபோல், ஒவ்வொரு நாளும் - அதன் இறுதி நாட்கள் எண்ணப்படும் நிலையில், அரசமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிர்மறையாக, ஹிந்துத்துவத்தை மறைமுகமாகப் பரப்பியும், பழைய மூடநம்பிக்கைகளைப் புதுப்பித்து, புதிய சுரண்டலை நடத்தி மக்களிடையே மதவாதம் கைவிடப்படவேண்டிய பழைய மூடநம்பிக்கைகளுக்குப் புத்துயிர் தந்து புது உரு - பெரு உரு எடுக்க உதவும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!
எடுத்துக்காட்டாக, ‘சுப நாட்களில்’, மக்கள் விரும்பும் ‘சுபயோக சுபதினங்கள்’ - அரசு விடுமுறை நாட்களாயினும், அன்றைய தினத்தில் பத்திரப் பதிவு செய்தால், சொத்துப் பெருகும் - வளம் செழிக்கும் என்று நம்பும் மூடநம்பிக்கையாளர்களை ஊக்குவிப்பதுபோல், அன்று கூடுதல் கட்டணம் செலுத்தி, பத்திரப் பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அ.தி.மு.க. அரசே அறிவித்திருப்பது அரசமைப்புச் சட்ட விரோதச் செயல் ஆகாதா?
மற்ற துறைகளுக்கு விடுமுறை என்றால், அன்றைய தினம் பத்திரப் பதிவு அலுவலகத்தைத் திறந்து பதிவு செய்தல் சட்ட முரண்பாடு அல்லவா?
அன்று பதிவு செய்தால், சொத்துப் பெருகும் என்பது குருட்டு நம்பிக்கை என்பதல்லாமல், அது என்ன விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட - அறிவியல் அடிப்படையிலான உண்மையா?
அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கி வைத்தால் தங்கம் குட்டி போடும் என்ற ஒரு ‘புரூடாவை’ப் பரப்பி தங்கத்தை விற்கும் மூடநம்பிக்கை வியாபாரம்போல, தமிழக அரசே இப்படி செய்ய முன்வரலாமா? இப்போதுள்ள அரசு ஒரு காபந்து அரசு (Caretaker Government) இதற்கு ஏன் இந்த குறுக்கு வழி? வேறு மதத்தினரைவிட, அதிகமாக இப்படி நம்புவது குறிப்பிட்ட ஒரு மதத்தவர்கள்தானே அதிகம். இவர்களைப் பார்த்துக் கெட்டுப் போனவர்களாக இந்த மண்ணில் வேறு சில மதத்தவர்களும் இருக்கக் கூடும் என்றாலும், எவர் செய்தாலும் மூடத்தனத்தின் முடைநாற்றம்தானே அது?
இதை ‘‘அரசு’’ (State) செய்யலாமா? தனியார் செய்வதே விரும்பத்தக்கதல்ல என்கிறபோது - சில ஹிந்துத்துவ - ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மையாளர்களான சில அதிகாரிகள் இப்படி ஒரு குறுக்கு வழி சொன்னால், கேட்பவர்களுக்கு மதி இருக்கவேண்டாமா?
சொத்து விற்பதும் - வாங்குவதும்தான் பத்திரப்பதிவு. ஒருவருக்கு வரவு என்றால், இன்னொருவருக்கு இழப்புதானே!
இதை அனுமதித்தால், இனி ஜோதிடமே கூட ஆஸ்தான ஜோதிடமாக ஆகிவிடும் அறிவீன ஆபத்தும் ஒவ்வொரு துறையிலும் உள்ளே நுழைந்துவிடக் கூடும்!
இதனை அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முனையும் அத்துணைப் பேரும், பகுத்தறிவாளர்களும், மதச் சார்பற்றோருடன் இணைந்து கண்டித்து, இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசை பின்வாங்கச் செய்யவேண்டும்.
இதில் சும்மா இருந்தால், முழு ஹிந்துத்துவ சாம்ராஜ்ஜியமாகவே ஆட்சி - ஆர்.எஸ்.எஸ். சார்பு அதிகாரவர்க்கமாக ஆகிவிடக் கூடும் - எச்சரிக்கை! எதிர்ப்பு மலைபோல் உருவாகட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!