Tamilnadu
கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறும் முறைகேடுகள்: அதிமுக அரசின் மெத்தனத்தால் விவசாயிகள் வேதனை!
அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மீண்டும் மீண்டும் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் விவசாயிகள் அதிக அளவில் நெற்பயிர் விவசாயம் செய்தனர். தற்போது அறுவடை காலம் என்பதால் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரசு நெல் கொள்முதல் செய்து வருகின்றது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் குறைவான அளவில் இருப்பதால் மேலும் கூடுதலான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் இருந்து நெல்லை, அரசு அலுவலவர்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்பட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் இரவு நேரங்களில் நெல்லை கொண்டு வரச்சொல்லி அவற்றை மறுநாள் காலையில் முதலில் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாற்றுகின்றனர்.
இதனால் சிறு குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாமண்டூர் ஊராட்சியில் வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு உதவிய கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளரிடம் கேட்டபோது, "இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இரவு நேரங்களில் ஆய்வு நடத்தப்படும்” என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.மோகனனிடம் கேட்டபோது, "மாவட்டத்தில் போதிய அளவில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை.
நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்ட இடத்திலும் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு துணை போகும் அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றும் மோகனன் வலியுறுத்தினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!