Tamilnadu

மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை... பணத்தைக் கேட்டு மிரட்டியதால் வாழ்வை முடித்துக்கொண்ட நெசவாளி!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அருணகிரி சத்திரம் கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். நெசவுத் தொழில் செய்துவந்த இவரது தொழில் கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சிவக்குமார் குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதையடுத்து சிவக்குமார், ஆரணியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் மூன்றாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பின்னர் நெசவுத் தொழில் சரியாக நடக்காததால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சிவக்குமார் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சரவணன் அடிக்கடி, சிவக்குமார் வீட்டிற்குச் சென்று, “வாங்கிய கடனை எப்போ திருப்பி கொடுப்ப” எனக் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் மன வேதனையிலிருந்த சிவக்குமார் நேற்று வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சிவக்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கந்துவட்டிக்கு கடன் கொடுத்த சரவணன் என்பவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றர்.

நெசவுத் தொழிலாளி சிவக்குமார் தற்கொலைக்குக் காரணமாக இருந்த சரவணனைக் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “அ.தி.மு.க-பா.ம.க படுதோல்வி விரக்தியால் திட்டமிட்டு செய்யப்பட்ட இரட்டைக்கொலை”: திருமாவளவன் குற்றச்சாட்டு!