Tamilnadu

தேர்தல் விளம்பரத்திற்காக மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என பொய் சொன்ன எடப்பாடி: ஆத்திரத்தில் விவசாயிகள்!

ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை ஊடகங்களில் விளம்பரம் செய்து தேர்தல் அனுகூலம் அடைய முயன்றது அ.தி.மு.க. ஆனால், ஏப்ரல் 9ஆம் தேதி ஆகியும் தமிழகத்தின் பல பகுதிகளில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை.

பல இடங்களில் குறை அழுத்த மின்சாரமே கிடைப்பதால், விவசாயத்திற்கான மின் மோட்டார்களை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறை அழுத்தத்தில் மோட்டார்களைப் பயன்படுத்துவதால் அடிக்கடி மோட்டார் பழுதடைந்து அதிக செலவு வைப்பதாகவும் புகார் தெரிக்கின்றனர்.

குறை மின்னழுத்தத்தில் 24 மணி நேரம் தருவதற்குப் பதிலாக, குறைவான நேரம் அளித்தாலும் முழுமையான மின் அழுத்தத்தில் மும்முனை மின்சாரம் கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளில் இன்னும் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரமே கிடைக்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், ஆங்காங்கே துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளம்பரம் செய்துகொள்ளும் நிலையில், மின் மோட்டார்களையே இயக்க முடியாமல் விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.